பாராளுமன்றத்திற்கு தீ வைக்க வந்தவர் இப்போது நீதி அமைச்சர் - நாமல் காட்டம்

பாராளுமன்றத்தை தீ வைத்து கொளுத்த வந்தவரை நீதியமைச்சராக வைத்திருக்கும் அரசாங்கம் எதிர்க்கட்சி எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என பேசுகிறது என்று பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.

பாராளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே நாமல் ராஜபக்ச இதனை குறிப்பிட்டார்.

தொடர்ந்துரையாற்றிய அவர், ''தெரிந்தே பொய் சொல்லும் 159 பேரைக் கொண்ட அரசாங்கம் இது. முதலில் அரசாங்கம் ஒன்று எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதை தெரிந்து செயற்படுங்கள்.

இந்நாட்டின் நீதித்துறை சுயாதீனமாக இருக்க வேண்டும். ஆனால் பொலிஸார் முன்வைக்கும் சான்றுகளின் அடிப்படையில் தான் நீதிபதிகள் செயல்படுகிறார்கள்.

பொலிஸ் துறை முற்றிலும் அரசியல் மயமாக்கப்பட்டுள்ளதுடன் அரசாங்கத்தின் ஒரு கைக் கூலியாக பொலிஸார் மாறியிருக்கிறார்கள்.

நான் பொலிஸ் மா அதிபரிடம் கேட்டுக்கொள்வது என்னவென்றால், இந்த  அரசியல் வலைக்குள் சிக்க வேண்டாம். பொலிஸ் மா அதிபர் ஜே.வி.பி.யின் பெலவத்த அலுவலகத்தின் பொலிஸ் மா அதிபரைப் போன்றுதான் நடந்துகொள்கிறார். இது மறைக்க வேண்டிய விஷயமல்ல முழு நாட்டிற்கும் தெரியும்.

பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் பேச்சைக் கேட்கும் போது, அது ஏதோ அரசாங்கத்தின் ஊடகப் பேச்சாளர் பேசுவது போன்று உள்ளது.

இதற்கு முன்னர் இதேபோன்று கட்சிகளுக்கு பக்கச் சார்பாக செயற்பட்ட பொலிஸ் மா அதிபர்களுக்கு என்ன நடந்தது என்பது குறித்து யோசித்துப் பாருங்கள்.'' என்று தெரிவித்தார்.

Bootstrap