தமிழ்மொழி பேசும் மக்களின் பேரவை இந்திய தூதுவருடன் சந்திப்பு

தமிழ்மொழி பேசும் மக்களின் அரசியல் பேரவையின் பிரதிநிதிகள் நேற்று (04) கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவை சந்தித்து கலந்துரையாடியது..

இச்சந்திப்பின்போது, தமிழ்மொழி பேசும் மக்களின் அரசியல் பேரவையின் நோக்கங்கள் மற்றும் செயற்பாடுகள் குறித்து இந்திய உயர்ஸ்தானிகருக்கு விரிவாக விளக்கமளிக்கப்பட்டதுடன், அண்மையில் ஜனாதிபதியுடனும் எதிர்க்கட்சித் தலைவருடனும் நடைபெற்ற சந்திப்புகளில் இடம்பெற்ற கருத்துப்பரிமாற்றங்கள் தொடர்பிலும் உயர்ஸ்தானிகருக்கு எடுத்துரைக்கப்பட்டது.

மேலும், இலங்கையின் மொத்த மக்கள் தொகையில் சுமார் 25 சதவீத மக்களை இப்பேரவை பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்பதும் சுட்டிக்காட்டப்பட்டது.

நீண்டகாலமாக ஒத்திவைக்கப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தல்களை விரைவாக நடத்துவதற்காக பேரவை மேற்கொண்டு வரும் முயற்சிகள் தொடர்பாகவும் இந்திய உயர்ஸ்தானிகரின் கவனம் ஈர்க்கப்பட்டது. இவ்விடயத்தில் இந்திய அரசு தொடர்ந்தும் தனது ஒத்துழைப்பையும் ஆதரவையும் வழங்கும் என்ற நம்பிக்கையையும் பேரவை வெளிப்படுத்தியது.

அத்துடன், இந்தியா–இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் இலங்கையின் அரசியலமைப்பில் மாகாண சபை முறைமை அறிமுகப்படுத்தப்படுவதில் இந்தியா ஆற்றிய முக்கிய பங்களிப்பும் இச்சந்திப்பில் வலியுறுத்தப்பட்டது.

Bootstrap