நேரலையில் சபைக் கூட்டம் - இலங்கையில் முதல் மாநகர சபை

தெஹிவளை - மலை லவினிய மாநகர சபை, தனது பொதுச்சபைக் கூட்டங்களை நேரலையில் ஒளிபரப்பத் தொடங்கிய இலங்கையின் முதல் உள்ளூராட்சி அமைப்பாக புதிய சாதனையைப் படைத்துள்ளது.

சபையின் ஒருமனதான ஒப்புதலைத் தொடர்ந்து, நேற்று காலை 9.30 மணி முதல் மாநகர சபையின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தின் ஊடாக கூட்டங்கள் நேரலையில் ஒளிபரப்பப்பட்டன.

2025 உள்ளூராட்சி தேர்தலில் சுயேச்சைக் குழுவாக போட்டியிட்டு தெரிவான சமூக நீதிக் கட்சியின் மாநகர சபை உறுப்பினர் அர்கம் முனீர் இந்த யோசனையை முன்வைத்திருந்தார்.

இந்த முயற்சியின் மூலம், சபை விவாதங்கள், தீர்மானங்கள் மற்றும் கலந்துரையாடல்களை பொதுமக்கள் நிகழ்நேரத்தில் பார்வையிடும் வாய்ப்பு கிடைப்பதுடன், வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் மக்கள் பங்கேற்பை மேலும் வலுப்படுத்தும் என மாநகர சபை தெரிவித்துள்ளது.

இந்த யோசனைக்கு ஒருமனதாக ஆதரவு வழங்கிய மேயர், பிரதி மேயர், ஆளும் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மற்றும் முழு சபைக்கும் சமூக நீதிக் கட்சி நன்றியைத் தெரிவித்துள்ளது.

Bootstrap