உறவுகளால் ஏமாற்றப்பட்ட நிலையில் நான்கு கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற ஸ்பெயின் வீராங்கனை அரான்ட்சா சன்செஸ் விகாரியோ

எண்பது, தொண்ணூறுகளில் ரெனிஸ் ரசிகர்களின் மனதை வென்ற அரான்ட்சா சன்செஸ் விகாரியோவைப் பற்றிய செய்தி ஒன்றை தொலைக்காட்சியில் பார்த்தபோது மனதில் சின்னதாக ஒரு கவலை வந்தது.

ஒரு காலத்தில் ரெனிஸ் மைதானத்தில் வெற்றிகளை மட்டுமே குவித்த அந்த நட்சத்திரம், இன்று வாழ்க்கையின் துயரமான செய்திகளில் இடம்பெற்றிருக்கின்றார்.

நான்கு கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற ஸ்பெயின் வீராங்கனை அரான்ட்சா சன்செஸ் விகாரியோ, தொண்ணூறுகளில் உலக பெண்கள் ரெனிஸின்  முடிசூடா ராணியாக விளங்கிய யேர்மனியின் ஸ்டெபி கிராபுக்கு மிகப் பெரிய சவாலாக இருந்தவர்.

இருவரும் ஏழு கிராண்ட்ஸ்லாம் இறுதிப் போட்டிகளில் சந்தித்திருக்கின்றார்கள். அரான்ட்சா, அதில் இரண்டு முறை ஸ்டெபி கிராபை வீழ்த்தி சம்பியன் பட்டத்தையும் வென்றிருக்கின்றார். அந்தக் காலத்து ரெனிஸ் ரசிகர்களுக்கு, ஸ்டெபி கிராப், அரான்ட்சா மோதல் என்றாலே தனி குதூகலம் இருக்கும்.

இன்று 54 வயதான அரான்ட்சா வேறு ஒரு காரணத்திற்காக செய்திகளில் இடம்பிடித்திருக்கிறார்.

ரெனிஸ் மற்றும் விளம்பர ஒப்பந்தங்கள் மூலம் பல மில்லியன் டொலர்கள் சம்பாதித்த அவர், தனது நிதி விவகாரங்களை முழுமையாக தனது முன்னாள் கணவர் ஜோசெப் சாண்டகானாவிடம் ஒப்படைத்திருந்தார்.

வரி மற்றும் நிதி தொடர்பான சட்டப் பிரச்சினைகள் உருவானபோது, பெரும் குற்றப் பணமும் நிலுவைத் தொகைகளையும் செலுத்த வேண்டிய நிலை அரான்ட்சாவுக்கு ஏற்பட்டது. சிறைத் தண்டனையைத் தவிர்க்க, 36 மில்லியன் டொலர்களுக்கும் அதிகமான தொகையை அரசுக்குச் செலுத்திய பின்னர், ஸ்பானிய தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றின்  நேர்லாணலில் கண்ணீருடன்,“என் முழுக் கவனமும் ரெனிஸில்தான் இருந்தது. பணம் சம்பந்தமான எல்லா விஷயங்களையும் என் கணவர்தான் கவனித்தார். நான் அவரை மிகவும் நேசித்தேன். ஆனால் அவர் எனக்கு உண்மையாக இருக்கவில்லை.”என்று தனது முன்னாள் கணவர் மீது குற்றம் சாட்டினார்.

இந்தச் சம்பவம் புதியதல்ல. 2012ம் ஆண்டிலேயே, தனது பெற்றோர்களும் தன்னைச் சுரண்டி, தனது வருமானத்தை தவறாக நிர்வகித்ததாக அரான்ட்சா குற்றம் சாட்டியிருக்கிறார்.

ஒரு காலத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்களின் கைதட்டலுக்கிடையே கோப்பைகளை உயர்த்திப் பிடித்த ஒரு விளையாட்டு வீராங்கனை, இன்று தனது உழைப்பில் சம்பாதித்த பணம் கையில் இல்லாமல், “எல்லாம் போய்விட்டது” என்று கண்ணீர் மல்கப் பேசுவதைப் பார்க்கும்போது மனதில் கவலை வந்து சேர்கிறது.

Bootstrap