கனடாவின் கியூபெக் நகரில் வசிக்கும் ஒரு தம்பதியினர், வேலை அனுமதிப் பத்திரம் புதுப்பிப்பில் ஏற்பட்ட நிர்வாகத் தாமதம் காரணமாக மாகாண சுகாதாரக் காப்பீட்டு பாதுகாப்பை இழந்துள்ளதால், இரண்டாவது குழந்தை பிறப்புக்காக $20,000 வரை மருத்துவச் செலவு ஏற்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளனர்.
பிரான்ஸைச் சேர்ந்த நோஎமி ரெய்ன் மற்றும் அவரது கணவர் ஜெரெமி சேக்வின், தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலை வாய்ப்பு கிடைத்ததைத் தொடர்ந்து 2023ஆம் ஆண்டு கியூபெக்கிற்கு குடிபெயர்ந்தனர்.
தற்போது 38 வார கர்ப்பிணியாக இருக்கும் நோஎமி, குழந்தை முன்கூட்டியே பிறந்தால் மருத்துவச் செலவுகளை ஏற்க முடியாத நிலை உருவாகும் என்ற அச்சத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
ஜெரெமி சேக்வின் தனது வேலை அனுமதிப் பத்திரம் காலாவதியாகும் முன்பே, அதைப் புதுப்பிக்க தேவையான Labour Market Impact Assessment (LMIA) ஆவணத்திற்காக தனது நிறுவனத்தின் மூலம் குடியேற்றத் துறையில் விண்ணப்பித்திருந்தார். ஆனால் அந்த ஆவணம் பல மாதங்கள் தாமதமாக கிடைத்ததால், ஜூன் 19ஆம் தேதி அவரது வேலை அனுமதி அதிகாரப்பூர்வமாக ரத்து செய்யப்பட்டது.
தேவையான ஆவணங்கள் இல்லாததால் அனுமதியை புதுப்பிக்க முடியவில்லை என்று கூட்டாட்சி அரசு தெரிவித்தது. பின்னர் ஜூலை மாத இறுதியில் LMIA ஆவணம் கிடைத்ததைத் தொடர்ந்து, அவரது வேலை அனுமதி மீண்டும் அங்கீகரிக்கப்பட்டது.
எனினும், கூட்டாட்சி அரசின் இணையதளத்தில் அவரது நிலைமை இன்னும் புதுப்பிக்கப்படாததால், கியூபெக் சுகாதாரக் காப்பீட்டு வாரியம் (RAMQ) ஜூன் மாதம் முதல் அமலுக்கு வரும் வகையில் குடும்பத்தின் சுகாதாரக் காப்பீட்டை ரத்து செய்தது. ஜெரெமியின் வேலை அனுமதியுடன் இணைக்கப்பட்டிருந்த நோஎமி ரெய்னின் காப்பீடும் இதனால் தானாகவே செல்லாததாக மாறியது.
இதன் காரணமாக, ஜூன் மாதத்திற்குப் பிறகு மேற்கொண்ட கர்ப்ப பரிசோதனைகள், அவசர சிகிச்சைகள் மற்றும் அல்ட்ராசவுண்ட் பரிசோதனைகளுக்கான செலவுகளையும் திரும்பச் செலுத்துமாறு RAMQ தற்போது கேட்டுள்ளது.
இதுகுறித்து ஜெரெமி சேக்வின், "தொலைபேசியில் பேசிய அதிகாரிகள், வேலை அனுமதி புதுப்பிப்பு முடிவு வரும் வரை எங்களின் காப்பீடு தொடரும் என்று இரண்டு முறை உறுதி அளித்திருந்தனர். ஆனால் தற்போது அதற்கு மாறான நிலை ஏற்பட்டுள்ளது" என்றார்.
RAMQ வெளியிட்ட அறிக்கையில், வேலை அனுமதி ரத்து செய்யப்பட்ட தகவல் தங்களுக்கு தாமதமாக கிடைப்பதால், சில நேரங்களில் காப்பீட்டு பாதுகாப்பு பின்னோக்கி ரத்து செய்யப்படும் நிலை ஏற்படலாம் என தெரிவித்துள்ளது. வேலை அனுமதி புதுப்பிப்பு குறித்து அதிகாரப்பூர்வ முடிவுக்காக ஒருவர் காத்திருப்பதை நிரூபித்தால், பொதுவாக அவர்களின் காப்பீட்டு தகுதி தொடரும் என்றும் கூறியுள்ளது.
இந்நிலையில், குடும்பத்தின் வழக்கறிஞர் பிரெடெரிக் பெரோன்-டெஷேன், கடந்த ஒரு ஆண்டாக LMIA ஆவணங்களைப் பெறுவதற்கான காலதாமதம் இரண்டு மாதங்களில் இருந்து ஆறு மாதங்களாக அதிகரித்துள்ளதாகவும், இதுபோன்ற பிரச்சினைகள் தற்போது மிகவும் பொதுவானதாக மாறியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த தாமதங்கள் வேலைவாய்ப்பாளர்களை மட்டுமல்லாமல், அவர்களின் குடும்பத்தினரையும் கடுமையாக பாதிக்கின்றன. குறிப்பாக, குழந்தைகளின் கல்வி மற்றும் குடும்பங்களின் வாழ்வாதாரத்திலும் இதன் தாக்கம் அதிகமாக இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
தற்போது, தங்களின் பெண் குழந்தை பாதுகாப்பாக பிறக்க வேண்டும் என்பதே தம்பதியினரின் முதன்மை விருப்பமாக உள்ளது. குழந்தை பிறப்பதற்கு முன் சுகாதாரக் காப்பீட்டு பாதுகாப்பு மீண்டும் வழங்கப்பட்டு, ஆயிரக்கணக்கான டொலர் மருத்துவச் செலவிலிருந்து தப்பிக்க முடியும் என்ற நம்பிக்கையில் அவர்கள் காத்திருக்கின்றனர்.