கனடாவின் ஆல்பெர்ட்டா மாகாணத்தில் உள்ள ஒரு சிறிய கிராமப் பகுதியில், வெள்ளை இன மேலாதிக்கவாதக் குழு ஒன்று ரகசியமாகப் பயிற்சி முகாம் நடத்திய தகவல் வெளியாகி அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜூலை தொடக்கத்தில், 'செகண்ட் சன்ஸ் கனடா' (Second Sons Canada) என்ற தீவிர தேசியவாத/வெள்ளை இன மேலாதிக்கவாத அமைப்பைச் சேர்ந்த 60-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள், கல்கரி நகருக்கு தென்மேற்கே உள்ள மில்லார்வில்லே (Millarville) பகுதிக்கு அருகே ஒன்று கூடினர்.
முகமூடி அணிந்த இந்த உறுப்பினர்கள் ராணுவ பாணியிலான பயிற்சிகள், சண்டைப் பயிற்சிகள் மற்றும் தீவிரவாத முழக்கங்களை எழுப்பியவாறு பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.
அப்பகுதியில் தன்னார்வலர்களால் நடத்தப்படும் 'ஸ்கொயர் புட் ஹால்' (Square Butte Hall) எனும் சமூக மையத்தை, தங்கள் அமைப்பின் உண்மையான நோக்கத்தையும் நடவடிக்கைகளையும் மறைத்து தவறான தகவல்களைக் கூறி முன்பதிவு செய்துள்ளனர்.
அமைதியான தங்கள் கிராமத்துப் பகுதியில் இத்தகைய தீவிரவாதக் குழுக்கள் புகுந்து பயிற்சி நடத்தியதை அறிந்து அப்பகுதி மக்கள் மற்றும் சிறு வணிகர்கள் கடும் அதிர்ச்சியும் அச்சமும் அடைந்துள்ளனர்.
கனடா அரச காவல்துறை (RCMP) இந்த 'செகண்ட் சன்ஸ்' அமைப்பைக் கூர்ந்து கவனித்து வருவதாகவும், வெறுப்பு சார்ந்த குற்றங்கள் மற்றும் சம்பவங்களை தீவிரமாகக் கண்காணித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.