கனடாவில் அதிகரிக்கும் திரைக் கண்காணிப்பு (Screen Time Surveillance): ஊழியர்கள் எதிர்ப்பு

கனடாவில் உள்ள முன்னணி நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் கணினித் திரைச் செயல்பாடுகளை மென்பொருள்கள் மூலம் தீவிரமாகக் கண்காணித்து வருவதற்கு ஊழியர்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

TD Bank மற்றும் Bell Canada போன்ற பெரிய நிறுவனங்கள், ஊழியர்கள் கணினியில் என்ன செய்கிறார்கள், மவுஸ் (Mouse) அசைவுகள் மற்றும் Microsoft Teams போன்ற செயலிகளில் எவ்வளவு நேரம் சுறுசுறுப்பாக இருக்கிறார்கள் என்பதைக் கண்காணிக்கச் சிறப்பு மென்பொருள்களைப் பயன்படுத்தி வருகின்றன.

TD Bank தனது நிதி நிறுவனக் குற்றத் தடுப்புப் பிரிவு ஊழியர்களின் திரைக் கண்காணிப்புக்காக 'WorkiQ' என்ற மென்பொருளை அறிமுகப்படுத்த உள்ளதாகத் தெரிவித்துள்ளது. இது ஊழியர்களின் உண்மையான உழைப்பைக் சரியாகப் பிரதிபலிக்காது என்றும், தேவையில்லாத பணி அழுத்தத்தை ஏற்படுத்துகிறது என்றும் ஊழியர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

Bell Canada ஏற்கனவே 'Verint' எனும் மென்பொருள் மூலம் ஊழியர்களைக் கண்காணித்து வருகிறது. இதில் 85% நேரம் கணினியில் சுறுசுறுப்பாக இயங்க வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், கழிப்பறைக்குச் செல்லவோ அல்லது பிற வேலைகளைச் செய்யவோ ஒரு நாளைக்கு வெறும் 23 நிமிடங்கள் மட்டுமே இடைவெளி கிடைப்பதாக ஊழியர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இந்தக் கண்காணிப்பு முறை தங்களைக் சிறுமைப்படுத்துவது போல் உள்ளதாகவும், கடும் மன உளைச்சலையும் பணி சோர்வையும் (Burnout) ஏற்படுத்துவதாகவும் ஊழியர்கள் கூறுகின்றனர்.

நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை எட்டத் தவறினால் போனஸ் இழப்பு, குறைந்த செயல் திறன் மதிப்பீடு அல்லது வேலையிழப்பு போன்ற நடவடிக்கைகளுக்கு ஆளாக நேரிடும் என அஞ்சுகின்றனர்.

 ஆவணங்களைப் படித்தல், யோசனைகளைத் திட்டமிடுதல் போன்ற முக்கியமான பணிகள் கணினி திரை இயக்கத்தில் கணக்கில் வராது என்பதால், இத்தகைய அளவீடுகள் தவறானவை என சுட்டிக்காட்டுகின்றனர்.

 பணியாளர்களைத் தீவிரமாகக் கண்காணிப்பது அவர்களின் வேலைத் திறனை உயர்த்தாது என்றும், மாறாக நிறுவனத்தின் மீதான நம்பிக்கையைக் குறைத்து, வெறும் போலித்தனமான செயல்பாடுகளுக்கே வழிவகுக்கும் எனப் பணித்துறை வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

Bootstrap