லண்டன் கத்திக்குத்து : பெண்ணொருவர் கைது

லண்டனின் கோவென்ட் கார்டன் பகுதியில் நடைபெற்ற கத்திக்குத்து தாக்குதலில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

லண்டனின் கோவென்ட் கார்டன் பகுதியில் நடந்த வன்முறை சம்பவத்தில் 4 ஆண்களை பெண் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எண்டெல் வீதியில் நடைபெற்ற இந்த சம்பவத்தை தொடர்ந்து லண்டன் ஆம்புலன்ஸ் சேவை மருத்துவ குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

அங்கு, கத்திக்குத்து தாக்குதலில் காயமடைந்த ஆண்களுக்கு போதுமான முதலுதவி சிகிச்சை வழங்கி மேல் சிகிச்சைக்காக அருகில் இருந்த சிகிச்சை மையத்திற்கு கொண்டு சென்றனர்.

இதில், 34, 39, 42 மற்றும் 52 வயதுடைய நான்கு ஆண்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாக பெருநகர காவல் துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

அதிர்ஷ்டவசமாக தாக்குதலில் யாருக்கும் உயிருக்கு ஆபத்தான காயங்கள் ஏற்படவில்லை என்றும், இரண்டு பேர் ஏற்கனவே வீடு திரும்பி விட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கத்திக்குத்து தாக்குதலை நடத்திய 47 வயதுடைய பெண் ஒருவரை காவல்துறையினர் தற்போது கைது செய்துள்ளனர்.

கத்தி போன்ற ஆபத்தான ஆயுதத்தை வைத்திருந்தல், தாக்குதல் நடத்துதல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் இந்த கைது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதிகாரிகள் சம்பவ இடத்தில் இருந்து ஒரு ஜோடி கத்திரிக்கோலை கைப்பற்றியுள்ளனர். மேலும் இந்த சம்பவம் மனநலம் சார்ந்த பிரச்சினை காரணமாக ஏற்பட்டு இருக்கலாம் என நம்புவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Bootstrap