மழைக்கும் மிதமான வானிலைக்கும் பெயர் பெற்ற பிரிட்டனில், வரலாறு காணாத கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளதால் நாட்டின் நீர் ஆதாரம் மற்றும் விவசாயத் துறை பெரும் சவாலைச் சந்தித்து வருகிறது.
இங்கிலாந்தின் பாதியளவிலும், வேல்ஸ் (Wales) முழுவதிலும் 'மிகக் கடுமையான' வறட்சி நிலை நிலவுவதாக சுற்றுச்சூழல் முகமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஜூலை மாதத்தில் பெறப்பட வேண்டிய சராசரி மழையில் 7% மட்டுமே இங்கிலாந்தில் பதிவாகியுள்ளது. தெற்கு இங்கிலாந்தில் வழக்கமான மழையில் வெறும் 1% (0.7 மி.மீ) மட்டுமே பெய்துள்ளது.
வறட்சியால் பயிர்கள் காய்ந்துபோய் விளைச்சல் 25% வரை குறைந்துள்ளதுடன், அறுவடையும் வழக்கத்திற்கு மாறாக முன்கூட்டியே முடிவடைந்துள்ளது.
கடும் வெப்பம் மற்றும் காய்ந்த தாவரங்கள் காரணமாக ஜூலை மாதத்தில் மட்டும் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் சுமார் 400 காட்டுத்தீ சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
வெப்ப அழுத்தம் மற்றும் புல் பற்றாக்குறை காரணமாகக் கரவை மாடுகளின் பால் உற்பத்தி குறைந்துள்ளதுடன், நிமோனியா மற்றும் ப்ளூடங் (Bluetongue) போன்ற புதிய நோய்களின் அச்சுறுத்தலும் அதிகரித்துள்ளது.
2 கோடிக்கும் அதிகமான மக்கள் (இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் மக்கள் தொகையில் கால் பங்கினர்) தோட்டங்களுக்குக் குழாய் மூலம் நீர் பாய்ச்சும் தடைக்கு (Hosepipe bans) உட்படுத்தப்பட்டுள்ளனர். வரும் 2050-ஆம் ஆண்டிற்குள் தினமும் 500 கோடி லிட்டர் நீர் பற்றாக்குறை ஏற்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
நீர்மட்டம் வெகுவாகக் குறைந்ததால் பிரிட்டனின் 200 ஆண்டுகள் பழமையான உள்நாட்டு நீர்நிலைகள் மற்றும் கால்வாய்கள் மூடப்பட்டு, படகு வீடுகளில் வாழ்வோர் மற்றும் வியாபாரிகளின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
நிலத்தில் ஈரப்பதத்தைத் தக்கவைக்க உழவர்கள் கரிமப் பொருட்களைச் சேர்ப்பதுடன், கோதுமை போன்ற வறட்சியைத் தாங்கும் பயிர்களுக்கு மாறி வருகின்றனர். நீர் நிறுவனங்கள் 10 புதிய நீர் தேக்கங்களைக் கட்டத் திட்டமிட்டுள்ள போதிலும், அவை 2030-களின் தொடக்கத்திலேயே பயன்பாட்டிற்கு வரும் எனக் கூறப்படுகிறது.