டொராண்டோ உயிரியல் பூங்காவில் பிறந்த அரிய வகை குள்ள நீர்யானை (Pygmy Hippo) குட்டி

டொராண்டோ உயிரியல் பூங்காவில் பெண் குள்ள நீர்யானை குட்டி ஒன்று பிறந்துள்ளதாக பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது.

டொராண்டோ உயிரியல் பூங்காவில் உள்ள 'கின்டியா' (Kindia) என்ற 20 வயது தாய் நீர்யானைக்கு ஞாயிற்றுக்கிழமை காலை பெண் குட்டி ஒன்று பிறந்தது.

பிறந்த சில நிமிடங்களிலேயே இந்தக் குட்டி தனது முதல் அடியை எடுத்து வைத்து நடக்கத் தொடங்கியதோடு, சில மணி நேரங்களிலேயே தனது இருப்பிடத்தைச் சுறுசுறுப்பாக சுற்றி வரத் தொடங்கியது. இது கின்டியாவிற்குப் பிறந்த 3-வது குட்டியாகும்.

மரங்கள் வெட்டப்படுதல் மற்றும் மனித ஆக்கிரமிப்புகளால் வாழ்விடங்களை இழந்து வரும் குள்ள நீர்யானைகள் அழியும் நிலையில் உள்ள உயிரினமாக அறிவிக்கப்பட்டுள்ளன. இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தின் (IUCN) கணிப்புப்படி, உலகில் 2,000 முதல் 3,000 குள்ள நீர்யானைகள் மட்டுமே எஞ்சியுள்ளன.

பிறந்த குட்டிக்கு ஆரம்பக் காலத்தில் பாதுகாப்பு மிகவும் அவசியம் என்பதால், தாயும் குட்டியும் ஒன்றோடொன்று பழகும் வரை பார்வையாளர்கள் பார்க்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

தாய்லாந்து உயிரியல் பூங்காவில் பிறந்து சமூக வலைதளங்களில் பெரும் பிரபலமடைந்த 'மூ டெங்' (Moo Deng) என்ற குள்ள நீர்யானை குட்டியுடன் இந்த புதிய குட்டியைச் செய்தி நிறுவனம் ஜாலியாக ஒப்பிட்டுள்ளது.

Bootstrap