தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் மனைவி சங்கீதா தாக்கல் செய்துள்ள விவாகரத்து மற்றும் குடியிருப்பு உரிமை தொடர்பான வழக்கு, செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் நாளை (07) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
விஜய் மற்றும் சங்கீதா ஆகியோர் 1999ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஜேசன் சஞ்சய் மற்றும் திவ்யா சாஷா என இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.
தனிப்பட்ட காரணங்களால் இருவரும் தனித்தனியாக வசித்து வருவதாகக் கூறப்படும் நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சங்கீதா, செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து மற்றும் குடியிருப்பு உரிமை கோரி மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த நிலையில், குறித்த வழக்கு கடந்த ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, விஜய் மற்றும் சங்கீதா ஆகியோர் நீதிமன்றத்தில் நேரில் முன்னிலையாகவில்லை.
அதற்குப் பதிலாக, இரு தரப்பினரும் தாக்கல் செய்த மனுக்களில், தாங்கள் பொதுவெளியில் அறியப்பட்ட நபர்கள் என்பதால் பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களைக் கருத்தில் கொண்டு, காணொளி வாயிலாக நீதிமன்றத்தில் முன்னிலையாக அனுமதி வழங்குமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதனையடுத்து, குறித்த வழக்கின் விசாரணை ஆகஸ்ட் 7ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்த வழக்கு நாளை (07) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள நிலையில், காணொளி வாயிலாக முன்னிலையாக அனுமதி கோரிய மனு தொடர்பிலும் நீதிமன்றம் பரிசீலிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.