ஆன்மீக தலைவர் கொமெய்னியை தொடர்புகொள்வது கடினம் – ஈரான் ஜனாதிபதி

இந்த தருணத்தில் ஈரான் ஆன்மீக தலைவர் கொமெய்னியை தொடர்பு கொள்வது மிகவும் கடினமாக உள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி மசூத் பெஜெஸ்கியான் கூறியுள்ளார்.

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டாக நடத்திய தாக்குதலில் அந்நாட்டின் ஆன்மீக தலைவர் அயோதுல்லா அலி கொமெய்னி கொல்லப்பட்டார். இதனையடுத்து புதிய மதத் தலைவராக அவரது மகன் மொஜ்தபா கொமெய்னி தேர்வு செய்யப்பட்டார்.

ஆனால், இதுவரை அவர் பொதுவெளியில் தோன்றவில்லை. தந்தை இறுதிச்சடங்கிலும் அவர் பங்கேற்கவில்லை. மொஜ்தபா கொமெய்னி பெயரில் அறிக்கை மட்டுமே வெளிவந்து கொண்டுள்ளன. அவர் உயிரிழந்துவிட்டார் எனவும், படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி இருந்தன. ஆனால், இதனை ஈரான் உறுதிப்படுத்தவில்லை.

இதனிடையே, மொஜ்தபா கொமெய்னிக்கும் ஜனாதிபதிக்கும் மசூத் பெஜெஸ்கியான் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியது. தற்போது நடந்து வரும் மோதல் மற்றும் பேச்சுவார்த்தை விவகாரத்தில் இறுதி முடிவெடுக்க ஜனாதிபதிக்கு கொமெய்னி இறுதிக்கெடு விதித்து உள்ளதாகவும், தனது ஆதரவை ஈரானிய புரட்சிகர படையின் கொமெண்டர் அஹமது வஹிடிக்கு அளிக்கப்போவதாக கொமெய்னி தெரிவித்துள்ளதாக ஈரான் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த மே மாதம் அரசியல் ரீதியில் தான் ஓரங்கட்டப்படுவதாக கூறி பெஜேஸ்கியான் இராஜிநாமா செய்யப்போவதாக தெரிவித்ததாகவும் அந்த ஊடகம் செய்தி வெளியிட்டிருந்தது.

இந்நிலையில் சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு மசூத் பெஜேஸ்கியான் அளித்த பேட்டியில் கூறியதாவது: ஈரான் அளிக்கும் பதிலடியில் மொஜ்தபா கொமெய்னி முக்கிய பங்காற்றி வருகிறார். தற்போதைய சூழலில் அவரை தொடர்பு கொள்வது கடினமாகவுள்ளது. அவரது ஆதரவு, எங்களின் பலமாக இருந்தது. அதன் வாயிலாக நாங்கள் எங்களது நடவடிக்கையை தொடர்ந்தோம்.

அவருடனான எனது சந்திப்பு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. துரதிர்ஷ்டவசமாக, தற்போதைய சூழ்நிலையில் சில தீய எண்ணம் கொண்டவர்கள் அவரை வேறுவிதமாக சித்தரிக்கவும், அவரை பற்றிய ஒரு மாறுபட்ட பிம்பத்தை முன்வைக்கவும் முயற்சி செய்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

Bootstrap