அமெரிக்காவில் ஆயுதக் கையிருப்பு பற்றாக்குறை தொடர்பாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்சேத் இடையே மோதல் ஏற்பட்டதாக வெளியான செய்தியை வெள்ளை மாளிகை மறுத்துள்ளது.
அமெரிக்காவின் வொஷிங்டன் போஸ்ட் வெளியிட்ட செய்தியில், நீண்ட தூர ஏவுகணைகள் மற்றும் வான் பாதுகாப்பு ஆயுதங்களின் பற்றாக்குறை குறித்து ட்ரம்ப், பாதுகாப்பு அமைச்சர் ஹெக்சேத்திடம் கேள்வி எழுப்பியதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், வெடிமருந்துகள் பற்றாக்குறை தொடர்பில் ட்ரம்ப் அதிருப்தியடைந்ததாகவும், அதற்கான பொறுப்பை ஹெக்சேத் தனது துணை அமைச்சர் ஸ்டீன் பெயின்பெர்க் மீது சுமத்தியதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த விவகாரம் காரணமாகவே ஈரான் மீதான தாக்குதலை நிறுத்தி பேச்சுவார்த்தைக்கு ட்ரம்ப் முன்வந்ததாகவும் செய்தியில் கூறப்பட்டிருந்தது.
எனினும், இந்த தகவல்களை வெள்ளை மாளிகை முற்றாக மறுத்துள்ளது. வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லெவிட், குறித்த செய்தி "100 சதவீதம் பொய்யானது" எனத் தெரிவித்ததுடன், ஹெக்சேத் மீது ட்ரம்ப் முழுமையான நம்பிக்கை வைத்துள்ளதாகவும் கூறினார்.
அதேவேளை, பென்டகன் செய்தித் தொடர்பாளர் சியான் பர்னெல், ட்ரம்பை ஹெக்சேத் தவறாக வழிநடத்தியதாகவும், துணை அமைச்சர் மீது குற்றம் சுமத்தியதாகவும் வெளியான தகவல்கள் முற்றிலும் கற்பனையானவை என மறுத்துள்ளார்.