ஒன்டாரியோவின் ‘பிரான்ட்ஃபோர்டு—பிரான்ட் சவுத்—சிக்ஸ் நேஷன்ஸ்’ தொகுதி கன்சர்வேடிவ் கட்சி எம்பி (MP) லேரி பிராக் (Larry Brock), வரும் செப்டம்பர் 18-ஆம் தேதியோடு தனது எம்பி பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
முன்னாள் அரசு வழக்கறிஞரான (Prosecutor) இவர், அரசியலில் இருந்து விலகி மீண்டும் ஒன்டாரியோவிலுள்ள பிரான்ட்ஃபோர்டு அரசு வழக்கறிஞர் அலுவலகத்தில் பணியாற்றத் திரும்பவுள்ளார்.
2021-இல் முதன்முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், 2025 தேர்தலிலும் வெற்றி பெற்றார். கன்சர்வேடிவ் கட்சியின் நீதித்துறை நிழல் அமைச்சராக (Shadow Minister for Justice) பணியாற்றிய இவர், கடந்த ஜூன் மாதம் அப்பொறுப்பிலிருந்து மாற்றப்பட்டார்.
இவரது ராஜினாமாவைத் தொடர்ந்து, பிரான்ட்ஃபோர்டு தொகுதியில் இடைத்தேர்தல் (By-election) நடத்தப்படும்.