இத்தாலி, ஜப்பான் மற்றும் பிரிட்டன் ஆகியவை இணைந்து உருவாக்கும் ஆறாம் தலைமுறை போர் விமானத் திட்டமான Global Combat Air Program (GCAP) இல் கனடா "பார்வையாளர் அந்தஸ்தை" (Observer status) பெற்றுள்ளது. இந்த நிலைக்கு எந்தக் கட்டணமும் செலுத்தத் தேவையில்லை என கனடாவின் தேசிய பாதுகாப்புத் துறை உறுதி செய்துள்ளது.
இந்த பார்வையாளர் அந்தஸ்து மூலம், இத்திட்டத்தின் தொழில்நுட்ப வளர்ச்சி, வணிகம் மற்றும் பாதுகாப்புச் சார்ந்த நன்மைகளை கனடாவால் நெருக்கமாகப் புரிந்து கொள்ள முடியும். எதிர்காலத்தில் முழு உறுப்பினராக இணைய முடிவு செய்தால் மட்டுமே நிதிப் பங்களிப்பு தேவைப்படும்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வர்த்தகப் போருக்குப் பிறகு, அமெரிக்காவிடமிருந்து F-35 போர் விமானங்களை முழுமையாக வாங்குவது குறித்த திட்டத்தை பிரதமர் மார்க் கார்னியின் அரசு மறுபரிசீலனை செய்து வருகிறது.
ட்ரோன்கள் மற்றும் வான்வெளித் தொழில்நுட்பத்தில் கனடாவின் சொந்தப் பங்களிப்பையும், நாட்டின் தொழில்முறை அமைப்புகளுக்கு வாய்ப்புகளையும் உறுதி செய்யவே கனடா இத்தகைய சர்வதேச கூட்டாண்மைகளை ஆராய்ந்து வருகிறது.