அமெரிக்க உச்சநீதிமன்றம் பிறப்பு உரிமைக் குடியுரிமைக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்த சில வாரங்களிலேயே, அதிபர் டொனால்ட் டிரம்ப் "பிறப்புச் சுற்றுலாவை" (Birth Tourism) தடுத்து, பிறப்பு உரிமைக் குடியுரிமையைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இரண்டு புதிய நிர்வாக உத்தரவுகளில் கையெழுத்திட்டுள்ளார்.
கர்ப்பிணிப் பெண்கள் சுற்றுலா அல்லது தற்காலிக விசாக்களில் அமெரிக்காவிற்கு வந்து குழந்தை பெற்று, அதன் மூலம் அக்குழந்தைக்கு அமெரிக்கக் குடியுரிமை பெறுவதை 'பிறப்புச் சுற்றுலா' எனக் குறிப்பிடுகின்றனர்.
இத்தகைய போலித்தனமான/ஏமாற்று நோக்கத்திற்காக இனி யாருக்கும் விசா வழங்கப்பட மாட்டாது என வெள்ளை மாளிகை அதிகாரி ஸ்டீபன் மில்லர் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு அரசு ஊழியர்களின் குழந்தைகள் மற்றும் 'அன்னிய எதிரிகள்' (Alien enemies) என வகைப்படுத்தப்பட்டவர்களின் குழந்தைகளுக்கான குடியுரிமை உரிமைகளையும் இந்த உத்தரவு கட்டுப்படுத்துகிறது.
அமெரிக்க அரசியலமைப்பின் 14-வது திருத்தம் (14th Amendment) அமெரிக்க மண்ணில் பிறக்கும் குழந்தைகளுக்கு இயல்பாகவே குடியுரிமையை உறுதி செய்கிறது.
உச்சநீதிமன்றம் ஏற்கனவே டிரம்பின் முந்தைய உத்தரவு அரசியலமைப்புக்கு எதிரானது எனத் தீர்ப்பளித்திருந்த நிலையில், தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவும் நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
2016-2017 காலக்கட்டத்தில் ஆண்டிற்கு சுமார் 20,000 முதல் 25,000 தாய்மார்கள் பிறப்புச் சுற்றுலா மூலம் அமெரிக்கா வந்ததாகக் கணப்பிடப்பட்டுள்ளது. 2025-ஆம் ஆண்டில் அமெரிக்காவில் மொத்தம் 3.6 மில்லியன் குழந்தைகள் பிறந்துள்ளன.