சத்துருக்கொண்டான் படுகொலை முறைப்பாட்டாளரை சிஐடி அழைப்பது நியாயமற்றது: சாணக்கியன் எம்பி சாடல்!

சத்துருக்கொண்டான் பகுதியில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் பொலிஸில் முறைப்பாடளித்த நபர் சி.ஐ.டி பிரிவின் 4 ஆம் மாடிக்கு அழைக்கப்பட்டுள்ளார். இந்த படுகொலை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவினால் நியமிக்கப்பட்ட குழுவில் பெயர் குறிப்பிடப்பட்ட மூன்று இராணுவ தளபதிகள் மற்றும் உயர் அதிகாரிகள் இதுவரையில் விசாரிக்கப்படவில்லை. முறைப்பாடளித்த நபரை நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் விசாரணைக்கு அழைப்பது நியாயமற்றது. வடக்கு மற்றும் கிழக்கில் இடம்பெற்ற பல படுகொலைகள் தொடர்பில் இதுவரை காலமும் முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணைகள் என்னவென்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் சபையில் கேள்வியெழுப்பினார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (07) நடைபெற்ற அமர்வின்போது நிலையியல் கட்டளை இருபத்தேழு இரண்டின் கீழ் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரிடம் மேற்கண்டவாறு கேள்வியெழுப்பினார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

1990 செப்டம்பர் மாதத்தில் மட்டக்களப்பில் இடம்பெற்ற சத்துருக்கொண்டான் படுகொலைகள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் முறைப்பாடளித்த நபரை 2026 ஆகஸ்ட் 14 ஆம் திகதி காலை 9.00 மணிக்கு புதிய குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் தலைமையகத்தின் 4 ஆம் மாடியிலுள்ள கொலை விசாரணைப் பிரிவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

2026/03/20 ஆம் இலக்கக் குறிப்பின்கீழ் மேற்கொள்ளப்படும் விசாரணையின் தற்போதைய நிலைமை என்ன, இதுவரை எட்டப்பட்டுள்ள முன்னேற்றம், விசாரணையின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ள தகவல்கள், பதிவு செய்யப்பட்டுள்ள சாட்சியங்களின் எண்ணிக்கை, அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட நபர்களின் எண்ணிக்கை,சந்தேக நபர்கள் எவரேனும் அடையாளம் காணப்பட்டுள்ளனரா, கைது செய்யப்பட்டுள்ளனரா அல்லது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாஇ மற்றும் இவ்விசாரணை சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதா அல்லது அது தொடர்பில் ஏதேனும் பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளதா?

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஆயுத மோதல்களின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டமை,படுகொலைகள்,மனிதப் படுகொலைகள் மற்றும் ஏனைய பாரிய குற்றங்கள் தொடர்பான எத்தனை சம்பவங்கள் தற்போது இலங்கை பொலிஸ் மற்றும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பதிவேடுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளன ? இந்த ஒவ்வொரு சம்பவத்தினதும் பெயர் அல்லது அமைவிடம் மற்றும் அது இடம்பெற்ற ஆண்டை குறிப்பிட முடியுமா ? தற்போது எத்தனை விசாரணைகள் தீவிரமாக இடம்பெறுகின்றன, எத்தனையில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன, மற்றும் வழக்குத் தாக்கல் இன்றி எத்தனை விசாரணைகள் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதா?

ஆயுத மோதல்கள் தொடர்பாக 'சேனல் 4' ஆவணப் படங்களில் தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து இலங்கை பொலிஸ், குற்றப்புலனாய்வுத் திணைக்களம் அல்லது வேறு ஏதேனும் சட்ட அமலாக்க அதிகார சபையினால் ஏதேனும் விசாரணைகள், குற்றவியல் நடவடிக்கைகள் அல்லது வழக்குத் தொடர்தல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளனவா, அவ்வாறாயின் எத்தனை விசாரணைகள், குற்றவியல் நடவடிக்கைகள் அல்லது வழக்குத் தாக்கல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதா?

சத்துருக்கொண்டான் மாத்திரமல்ல, வடக்கு மற்றும் கிழக்கில் பெரும்பாலான பகுதிகளில் பல படுகொலைகள் இடம்பெற்றுள்ளன. ஆனால் அவை தொடர்பில் எவ்வித விசாரணைகளும் முன்னெடுக்கப்படவில்லை.

கிளிவெட்டி பிரதேசத்தில் குமாரபுரத்தில் 06 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் அநுராதபுரம் பகுதிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். அவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பது இதுவரையில் தெரியவில்லை. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல படுகொலைகள் இடம்பெற்றுள்ளன. அவை தொடர்பில் எடுக்கபபட்டுள்ள விசாரணைகள் என்ன என்றார்.

Bootstrap