மெக்சிகோ ஆய்வுகளை அமெரிக்கா நிறுத்தியதால் கனடாவின் வெண்ணெய் பழம் (அவகேடோ) விநியோகத்தில் பாதிப்பில்லை

பாதுகாப்பு காரணங்களுக்காக மெக்சிகோவின் மிச்சோக்கன் (Michoacán) மாநிலத்தில் அமெரிக்கா தனது இறக்குமதி ஆய்வுகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ள போதிலும், கனடாவிற்கான அவகேடோ இறக்குமதியில் பெரிய அளவிலான பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை என கனடிய உணவு ஆய்வு முகமை (CFIA) தெரிவித்துள்ளது.

மெக்சிகோவில் உள்ள அவகேடோ உற்பத்தியாளர்கள் மற்றும் பேக்கர்கள் சங்கத்தின் (APEAM) கூற்றுப்படி, குற்றக் கும்பல்களின் அச்சுறுத்தல் மற்றும் கப்பப் பணம் கோரும் சம்பவங்கள் காரணமாகவே அமெரிக்க அரசு இந்த ஆய்வு நடவடிக்கைகளைத் தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது.

அமெரிக்காவின் இந்த தற்காலிகத் தடையால் கனடாவுக்கு வரும் அவகேடோ இறக்குமதியில் குறிப்பிடத்தக்க எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என்றும், ஆண்டுக்கு ஆண்டு அவகேடோ இறக்குமதி சீராகவே இருந்து வருவதாகவும் CFIA தெரிவித்துள்ளது.

ஆய்வாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், அவகேடோ ஏற்றுமதியை மீண்டும் தொடங்கவும் மெக்சிகோ அரசு மிச்சோக்கன் மாநிலத்திற்கு 1,500-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களையும் தேசிய காவல்படையினரையும் அனுப்பி வைத்துள்ளது.

மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷீன்பாம் (Claudia Sheinbaum), அமெரிக்கத் தூதரகத்துடன் இணைந்து ஒரு திட்டத்தை வகுத்து வருவதாகவும், இந்த இடைநிறுத்தம் விரைவில் முடிவுக்கு வரும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மிச்சோக்கன் மற்றும் ஜாலிஸ்கோ (Jalisco) மாநிலங்களில் அதிகரித்துள்ள வன்முறை மற்றும் குற்றச் செயல்கள் காரணமாக, கனடா மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளும் தங்கள் நாட்டு மக்களுக்கு அப்பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு பயண எச்சரிக்கைகளை விடுத்துள்ளன.

Bootstrap