வின்னிபெக் (Winnipeg) நகரைச் சேர்ந்த குடும்பமொன்று, நான்காம் கட்ட புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிருக்குப் போராடும் தங்கள் தாயை, ஹெல்த் சயின்சஸ் சென்டர் (HSC) அவசர சிகிச்சைப் பிரிவில் 20 மணி நேரம் ஸ்ட்ரெச்சரிலேயே (Stretcher) காத்திருக்க வைத்ததாகக் கூறி மிகுந்த மனவேதனையையும் கோபத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர்.
தெரசா சானோவ்ஸ்கி (Theresa Chanowski) தனது தாய் காலீன் டைட்டானிச் (Colleen Titanich), நடக்க முடியாமல் போனதைத் தொடர்ந்து திங்கள்கிழமை ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார்.
70 வயதான காலீன் டைட்டானிச் அவசர சிகிச்சைப் பிரிவின் ஹால்வேயில் 20 மணி நேரத்திற்கும் மேலாகப் படுக்கை இன்றி காத்திருக்க வைக்கப்பட்டார்.
அவசர சிகிச்சைப் பிரிவு மிகவும் பரபரப்பாகவும், சத்தம் நிறைந்ததாகவும், போதைப்பொருள் பயன்பாட்டாளர்களின் இடையூறுகள் மற்றும் காவலர்களின் நடமாட்டத்துடனும் காணப்பட்டதாக சானோவ்ஸ்கி தெரிவித்துள்ளார். வலி மற்றும் குழப்பமான நிலையில் இருந்த தனது தாய்க்கு குறைந்த முன்னுரிமையே அளிக்கப்பட்டது என்றும் அவர் வேதனையுடன் கூறினார்.
போதைப்பொருள் பயன்பாடு மற்றும் அதிலிருந்து மீண்டு வரும் அறிகுறிகளுடன் வரும் நோயாளிகளுக்குத் தனியாக அவசர பராமரிப்பு மையம் அல்லது புதிய வகைப்படுத்தும் முறை (Triage process) அமைக்கப்பட வேண்டும் என சானோவ்ஸ்கி வலியுறுத்தியுள்ளார்.
சானோவ்ஸ்கி மாநில சுகாதார அமைச்சரின் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு முறையிட்ட பிறகே, அவரது தாய்க்குப் படுக்கை ஒதுக்கப்பட்டு 'பலியேட்டிவ் கேர்' (Palliative care) பிரிவுக்கு மாற்றப்பட்டார்.
மேனிடோபா செவிலியர்கள் சங்கத்தின் தலைவர் டார்லின் ஜாக்சன் (Darlene Jackson) கூறுகையில், இதுபோன்ற சூழல்களால் நோயாளிகள் மருத்துவரைப் பார்க்காமலேயே திரும்பிச் செல்வதும், பின்னர் நிலைமை மேலும் மோசமடைந்து மீண்டும் மருத்துவமனைக்கு வருவதும் அதிகரித்துள்ளதாகக் கூறினார்.
மேனிடோபா சுகாதார அமைச்சர் உஸோமா அஸாக்வாரா (Uzoma Asagwara), இந்த நீண்ட காத்திருப்பு நேரப் பிரச்சனையை உடனடியாக சரிசெய்துவிட முடியாது என்றும், நிலமையைச் சீரமைக்கக் கூடுதல் காலம் எடுக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.