கியூபெக் மாகாணம் லவால் (Laval) பகுதியில் புதன்கிழமை அதிகாலை நடந்த கோர விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்தனர்; மேலும் ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதிகாலை 1:20 மணியளவில், உரிமத் தகடு (Licence plate) இல்லாமல் சென்ற வாகனத்தை ரோந்து பொலிஸார் நிறுத்த முயன்றனர். ஆனால், வாகன ஓட்டுநர் காரின் வேகத்தை திடீரென அதிகப்படுத்தி தப்பிச் செல்ல முயன்றார்.
பொலிஸ் செய்தித் தொடர்பாளர் லாரன்ட் அர்செனால்ட் (Laurent Arsenault) கூறுகையில், "பொலிஸ் காரின் விளக்குகளை ஒளிரவிட்டு காரை நிறுத்த முயன்றபோது அது வேகமாகத் தப்பியோடியது. பொதுமக்களுக்கும் பொலிஸாருக்கும் ஆபத்து ஏற்படும் என்பதால் தொடர்ந்து துரத்த வேண்டாம் என அதிகாரி முடிவெடுத்தார்" என்று தெரிவித்தார்.
கட்டுப்பாட்டை இழந்த அந்த வாகனம், Boulevard des Laurentides பகுதியில் உள்ள அட்லாண்டிஸ் ஜிம் (Atlantis Gym) கட்டடத்தின் மீது பலமாக மோதியது.
காரை ஓட்டிச் சென்றவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. காரில் பயணித்த 19 வயதான பெண் ஒருவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட பிறகு உயிரிழந்தார். மற்றொரு 19 வயது இளைஞர் உயிருக்குப் போராடும் நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளார்.
விபத்தைத் தொடர்ந்து Boulevard des Laurentides சாலை இருபுறமும் தற்காலிகமாக மூடப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
விபத்துக்கான காரணங்களைக் கண்டறிய விபத்து மறுசீரமைப்பு நிபுணர்கள் மற்றும் தடயவியல் குழுவினர் களத்தில் ஆய்வு செய்தனர்.
கியூபெக் மாகாண பொலிஸ் கண்காணிப்பு அமைப்பான 'Bureau des enquetes independantes', சம்பவத்தின் விவரங்களை ஆய்வு செய்த பிறகு இந்த விவகாரத்தில் தனியாக விசாரணை எதுவும் நடத்தப்பட மாட்டாது என அறிவித்துள்ளது.