பிரிட்டிஷ் கொலம்பியாவில் (B.C.) காட்டுத்தீ அச்சுறுத்தல் காரணமாக அதிகாரிகள் வெளியேற்ற உத்தரவுகளைப் பிறப்பித்த போதிலும், பல விவசாயிகள் மற்றும் பண்ணையாளர்கள் தங்களின் வாழ்வாதாரத்தையும் விலங்குகளையும் பாதுகாக்கத் தங்கள் இடங்களிலேயே தங்கியிருந்து தீயை எதிர்த்துப் போராடி வருகின்றனர்.
அதிகாரிகள் "வெளியேற்ற உத்தரவு என்பது ஒரு விருப்பம் அல்ல; அது உயிர் பாதுகாப்பு நடவடிக்கை, உடனடியாக வெளியேறுங்கள்" என எச்சரித்த போதிலும், தலைமுறை தலைமுறையாக உருவாக்கப்பட்ட தங்களின் சொத்துக்களைப் பாதுகாக்க விவசாயிகள் இந்த ஆபத்தான முடிவை எடுக்கின்றனர்.
ஆயிரக்கணக்கான விலங்குகளை குறுகிய காலத்தில் லாரிகள் மற்றும் டிரெய்லர்கள் மூலம் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்வது கடினம்.
சாலைகள் மூடப்படும்போது, விலங்குகளை விட்டுச்செல்ல மனமில்லாமல் விவசாயிகள் அங்கேயே தங்கி அவற்றைப் பாதுகாக்கின்றனர்.
பசுக்கள் மற்றும் கால்நடைகளை வாகனங்களில் ஏற்றுவது அவற்றுக்கு அதிக மன அழுத்தத்தை தரும் என்பதால், நிலத்தின் வழியாகவே திறந்தவெளிகளுக்கு ஓட்டிச் செல்வது எளிது எனக் பண்ணையாளர்கள் கூறுகின்றனர்.
பல விவசாயிகளிடம் எக்ஸ்கவேட்டர்கள் (Excavators), தண்ணீர் டிரக்குகள் மற்றும் குழாய்கள் (Hoses) போன்ற தீயணைப்பு உபகரணங்கள் உள்ளன. அவர்கள் மரங்கள் மற்றும் புதர்களை வெட்டி, தெளிப்பான்களைப் (Sprinklers) பயன்படுத்தித் தங்கள் நிலங்களை முன்கூட்டியே பாதுகாப்பாக வைத்துள்ளனர்.
ஆப்பிள் மற்றும் பழத்தோட்டங்களை மீண்டும் உருவாக்க 7 ஆண்டுகள் ஆகும், மேலும் அதில் செய்த முதலீட்டை திரும்பப் பெற 15 முதல் 20 ஆண்டுகள் வரை ஆகும். பழத்தோட்டங்கள் மற்றும் பண்ணைகள் அழிந்தால் அவர்களின் ஒட்டுமொத்த வாழ்க்கையே பாழாகிவிடும் என்பதால், அவர்கள் தங்கள் நிலத்தைப் பாதுகாக்கப் போராடுகிறார்கள். பல தலைமுறைகளாக அங்கே வாழும் பண்ணையாளர்களுக்கு அப்பகுதியின் காற்று வீசும் திசை மற்றும் தீ பரவும் விதம் குறித்த அனுபவம் உள்ளது. இது தீயணைப்புப் படையினருக்கும் பயனுள்ள தகவல்களை வழங்க உதவுகிறது.
பி.சி. முதலமைச்சர் டேவிட் ஈபி (David Eby) பேசுகையில், மனித உயிர்களைப் பாதுகாப்பதே முதல் முன்னுரிமை என்றாலும், வெளியேற்ற உத்தரவு வரும்போது ஆபத்தில் இருக்கும் தங்களது விலங்குகளை எண்ணி விவசாயிகள் எதிர்கொள்ளும் கடினமான சூழ்நிலையைப் புரிந்துகொள்ள முடிவதாகத் தெரிவித்துள்ளார்.