கடலுக்கு அடியில் உள்ள சில குறிப்பிட்ட பகுதிகள் எப்படி இயற்கை தங்கத் தொழிற்சாலைகளாக செயல்படுகின்றன என்பது குறித்து இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
தங்கம் அதன் அரிதான தன்மைக்காக நீண்ட காலமாகவே மதிப்புமிக்கதாகக் கருதப்படுகிறது. இருப்பினும், தங்கம் ஏன் சில குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே கிடைக்கிறது, மற்ற இடங்களில் கிடைப்பதில்லை என்ற கேள்வி விஞ்ஞானிகளிடையே நீண்ட காலமாக இருந்தது. பெருங்கடல்களின் ஆழத்தில், மனிதர்களின் பார்வைக்கு அப்பாற்பட்ட பகுதியில், பல மில்லியன் ஆண்டுகளாக இதற்கான விடை உருவாகி வந்துள்ளது.
தற்போது வெளியிடப்பட்டுள்ள ஒரு புதிய ஆய்வு இதற்கான தெளிவான பதிலை அளிக்கிறது. கடலுக்கு அடியில் உள்ள சில குறிப்பிட்ட பகுதிகள் எப்படி இயற்கை "தங்கத் தொழிற்சாலைகளாக" செயல்படுகின்றன என்பதையும், அங்கிருக்கும் சாதகமான சூழல் காலப்போக்கில் தங்கம் திரள்வதற்கு எவ்வாறு உதவுகிறது என்பதையும் இந்த ஆய்வு விளக்குகிறது.
இந்த ஆராய்ச்சி நியூசிலாந்தின் வடகிழக்கே அமைந்துள்ள 'கெர்மாடெக் தீவு வளைவு' (Kermadec Island Arc) பகுதியில் கவனம் செலுத்தியுள்ளது. ஜெர்மனியின் ஜியோமார் ஹெல்ம் ஹோல்ட்ஸ் பெருங்கடல் ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த (GEOMAR Helmholtz Centre for Ocean Research Kiel) கிறிஸ்டியன் டிம் தலைமையிலான குழுவினர் இந்த ஆய்வை மேற்கொண்டு, 'கமினிகேஷன்ஸ் எர்த் & என்விரான்மென்ட்' (Communications Earth & Environment) இதழில் வெளியிட்டுள்ளனர். கடலுக்கு அடியில் உள்ள எரிமலைத் தீவு வளைவுகள் தங்கம் நிறைந்த பொருட்களை எவ்வாறு உருவாக்க முடியும் என்பதை இது விளக்குகிறது.
அணு மட்டத்தில் தங்கம் உருவாகும் விதமே அது அரிதாக இருப்பதற்குக் காரணமாகும். மற்ற பல தனிமங்களை விட இது எடை அதிகமானது. இதனால் பூமியின் மேலோட்டில் இது மிகவும் குறைவாகவே காணப்படுகிறது. ஆனால், தங்கம் சில குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் அதிகமாகக் கிடைப்பது ஏன் என்பதற்கு இது முழுமையான விளக்கமாக அமையவில்லை. தங்கப் படிவுகள் ஒரே சீராக இல்லாமல் அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பரவியிருப்பதை விஞ்ஞானிகள் நீண்டகாலமாக அறிந்திருந்தனர். அது ஏன் நிகழ்கிறது என்பதைப் புரிந்துகொள்ள இந்த ஆய்வு உதவுகிறது.
கடலுக்கு அடியில் ஆய்வு செய்யப்பட்ட 'தங்கத் தொழிற்சாலை'
ஆராய்ச்சிக் குழுவினர் எரிமலைத் தீவு வளைவுகளை ஆய்வு செய்தனர். இவை ஒரு புவித்தட்டு மற்றொரு தட்டின் கீழே நகர்ந்து, எரிமலை செயல்பாடுகளுக்கு வழிவகுக்கும் இடங்களாகும். தங்கம் எவ்வாறு உருவாகிறது என்பதைப் படிப்பதற்கு இந்த பகுதிகள் சரியான சூழலை உருவாக்குகின்றன.
ஆராய்ச்சியாளர்கள் கெர்மாடெக் வளைவு மற்றும் அருகிலுள்ள 'ஹாவ்ரே தொட்டி' பகுதிகளை ஆய்வு செய்தனர். கடல் தளத்தில் இருந்து எடுக்கப்பட்ட 66 'எரிமலைக் கண்ணாடி' (Volcanic Glass) மாதிரிகளை அவர்கள் பரிசோதித்தனர். சூடான எரிமலைக் குழம்பு நீரில் விரைவாகக் குளிர்ந்து, அதனுள் உள்ள தனிமங்களின் அசல் கலவையை அப்படியே தக்கவைத்துக்கொள்ளும்போது இந்த மாதிரிகள் உருவாகின்றன.
இந்த ஆய்வின் முதன்மை ஆசிரியரான கிறிஸ்டியன் டிம் தனது அறிக்கையில் தெரிவித்ததாவது, "இந்த மாதிரிகளை நாங்கள் பகுப்பாய்வு செய்தபோது, மத்திய பெருங்கடல் முகடுகளில் இருந்து கிடைக்கும் ஒப்பிடக்கூடிய மாக்மாக்களை விட இவற்றில் தங்கத்தின் செறிவு பல மடங்கு அதிகமாக இருப்பதை நாங்கள் கண்டறிந்தோம். இது ஒரு முக்கிய கேள்வியை எழுப்பியது. தங்கத்தின் இந்தச் செறிவூட்டலுக்கு என்னென்ன செயல்பாடுகள் காரணம்?"
பூமிக்கு அடியில் ஆழத்தில் என்ன நடக்கிறது?
இந்த மாதிரிகளில் எதிர்பார்த்ததை விட அதிக தங்கம் இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டது. மற்ற ஒப்பிடக்கூடிய பாறைகளை விட தங்கத்திற்கும் தாமிரத்திற்கும் இடையிலான விகிதமும் இதில் மிகவும் அதிகமாக இருந்தது. தங்கம் உருவாகும் பின்னணியைப் புரிந்துகொள்ள, வெள்ளியம், தாமிரம், செலினியம் மற்றும் பிளாட்டினம் போன்ற பிற தனிமங்களுடன் சேர்த்து தங்கத்தையும் குழுவினர் ஆய்வு செய்தனர்.
இதன் பின்னணியில் உள்ள முக்கிய செயல்முறை 'நீரேற்ற உருக்கம்' என்று அழைக்கப்படுவதை அவர்கள் கண்டறிந்தனர். புவித்தட்டுகளுடன் சேர்ந்து தண்ணீரும் பூமிக்கு அடியில் ஆழமாகத் தள்ளப்படும் 'சப்டக்ஷன் மண்டலங்களில்' (Subduction Zones) இது நிகழ்கிறது.
உயர் வெப்பநிலையில், இந்தச் செயல்முறை 'சல்பைடுகள்' (Sulfides) எனப்படும் தாதுக்களை உடைக்கிறது. இந்தத் தாதுக்கள்தான் வழக்கமாகத் தங்கத்தைத் தங்களுக்குள் பூட்டி வைத்திருக்கும். அவை உடையும் போது, தங்கம் உருகிய பாறைக்குள்ளே விடுவிக்கப்படுகிறது. மீண்டும் மீண்டும் நடக்கும் இந்த உருகுதல் செயல்முறை, காலப்போக்கில் 'மாக்மாவில்' தங்கத்தின் அளவை அதிகரிக்க உதவுகிறது.