ஆர்க்டிக் பகுதியில் சீனாவுக்கு எதிராக கனடா, அமெரிக்கா கண்காணிப்பு தீவிரமாக்கம்

அலாஸ்கா அருகே உள்ள ஆர்க்டிக் பெருங்கடல் பகுதியில் சீன ஆராய்ச்சி பனிமுறிப்புக் கப்பல்களான ‘ஸ்னோ டிராகன்’ (Xue Long) மற்றும் ‘ஸ்னோ டிராகன் 2’ (Xue Long 2) ஆகிய இரண்டு கப்பல்களும் பயணித்து வரும் நிலையில், கனடா மற்றும் அமெரிக்கப் படைகள் அவற்றைத் தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றன.

கனடா ராணுவத்தின் CP-140 கண்காணிப்பு விமானம், கனடா கடற்படைக் கப்பல்கள் (HMCS Ottawa, HMCS Max Bernays, HMCS Robert Hampton Gray), கடலோரக் காவல்படை கப்பல் மற்றும் சிறப்புப் படைகள் அமெரிக்கப் படைகளுடன் இணைந்து சீனக் கப்பல்களின் நகர்வுகளைக் கண்காணித்து வருகின்றன.

சீனா இந்த ஆய்வுகள் அமைதியான அறிவியல் மற்றும் பருவநிலை மாற்றம் சார்ந்தவை எனக் கூறினாலும், இக்கப்பல்கள் மூலம் ஆழ்கடலில் மிதக்கவிடப்படும் அதிநவீன சோனார் (Sonar) கருவிகள் மேலைநாடுகளின் நீர்மூழ்கிக் கப்பல்களின் நகர்வுகளைக் கண்காணிக்கவும், கடலடி தகவல் தொடர்பு கேபிள்களை (Subsea cable networks) வரைபடமாக்கவும் பயன்படலாம் என பாதுகாப்பு வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

 சீனா மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளும் ஆர்க்டிக் பகுதியில் தங்களின் கூட்டு நடவடிக்கைகளை அதிகரித்து வருவதால், கனடா தனது ஆர்க்டிக் பிராந்திய பாதுகாப்பை பலப்படுத்தவும், புதிய நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் கடலடி சென்சார் அமைப்புகளை நிறுவவும் திட்டமிட்டு வருகிறது.

Bootstrap