“எங்கள் பூர்வீக காணிகள் எங்களுக்கே வேண்டும்” - பலாலி மக்கள் போராட்டம்

வலிகாமம் வடக்கு, பலாலி பகுதியில் தமது பூர்வீக காணிகளில் மீள்குடியேற அனுமதிக்கக் கோரி காணி உரிமையாளர்கள் இன்று (09) 8ஆவது வாரமாகவும் தொடர் அமைதிவழிப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

பலாலி சந்தியில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், நீண்டகாலமாக தமது காணிகள் அரச படைகளின் கட்டுப்பாட்டில் இருப்பதால் சொந்த நிலங்களுக்குத் திரும்ப முடியாத நிலை தொடர்வதாக மக்கள் தெரிவித்தனர்.

“எங்கள் காணிகள் எங்களுக்கே வேண்டும்”, “பூர்வீக நிலங்களில் மீள்குடியேற அனுமதிக்க வேண்டும்”, “மக்களின் நிலங்களை சுரண்டுவதை நிறுத்த வேண்டும்” உள்ளிட்ட கோஷங்களை எழுப்பியவாறு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பல ஆண்டுகளாக சொந்த நிலங்களில் குடியேற முடியாத காரணத்தால் தமது குடியிருப்பு, வாழ்வாதாரம் மற்றும் எதிர்கால வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

தமது காணிகளை விடுவிப்பதாக அரசாங்கத்தினால் பல்வேறு சந்தர்ப்பங்களில் உறுதிமொழிகள் வழங்கப்பட்ட போதிலும், அவை முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் குற்றஞ்சாட்டினர்.

இதன் காரணமாகவே தமது காணிகளை மீட்பதற்காக தொடர்ச்சியான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

தமது பூர்வீக நிலங்களில் மீள்குடியேறி இயல்பான வாழ்க்கையை முன்னெடுப்பதே தங்களது பிரதான கோரிக்கை என தெரிவித்த மக்கள், எந்தவித வன்முறையுமின்றி அமைதியான முறையில் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்து வருவதாகவும் குறிப்பிட்டனர்.

பலாலி மக்களின் பூர்வீக காணிகளை உரிய உரிமையாளர்களிடம் மீளக் கையளித்து, அவர்களின் மீள்குடியேற்றத்தை உறுதிப்படுத்த அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.

“நிலம் எங்களின் உரிமை; எங்கள் பூர்வீக நிலங்களை விட்டுக்கொடுக்க மாட்டோம்” என்ற கோரிக்கையுடன், 8ஆவது வாரமாகவும் பலாலி சந்தியில் மக்கள் தமது போராட்டத்தை தொடர்ந்தனர்.

Connection failed: Operation not permitted