ஜப்பானில் பயன்படுத்திய பாடசாலை நீச்சல் உடைகளை விற்பனை செய்ய தடை

ஜப்பானில் பயன்படுத்திய பாடசாலை மாணவர்களின் நீச்சல் உடைகளை இணையவழியில் விற்பனை செய்வதற்கு முன்னணி இணையவழி விற்பனை நிறுவனமான மெர்காரி திடீர் தடை விதித்துள்ளது.

தனிநபர்கள் புதிய மற்றும் பயன்படுத்திய பல்வேறு பொருட்களை விற்பனை செய்யும் மெர்காரி இணையவழிச் சந்தையில், கடந்த 3ஆம் திகதி முதல் பயன்படுத்திய பாடசாலை நீச்சல் உடைகளை விற்பனை செய்ய அனுமதிக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானில் பாடசாலை மாணவர்களுக்கு நீச்சல் பயிற்சி உடற்கல்வியின் ஒரு பகுதியாக வழங்கப்படுகின்றது. இதற்காக மாணவர்கள் அணியும் நீச்சல் உடைகள் பொதுவாக கருப்பு அல்லது அடர் நீல நிறத்தில் எளிமையாக வடிவமைக்கப்பட்டிருக்கும். இவை ஜப்பானிய மொழியில் ‘ஸ்கூல் மிசுகி’ என அழைக்கப்படுகின்றன.

மாணவர்களின் பெயரை எழுதுவதற்கான இடம் உள்ளிட்ட அடையாளங்கள் சில நீச்சல் உடைகளில் இடம்பெற்றிருப்பதுடன், சில பாடசாலைகளின் சின்னங்களும் அச்சிடப்பட்டிருக்கும்.

குழந்தைகள் வளர்ச்சியடைவதால், குறுகிய காலமே பயன்படுத்தப்பட்ட நிலையில் நல்ல தரத்திலுள்ள நீச்சல் உடைகள் பல வீடுகளில் மீதமாகின்றன. இதனால், அவற்றை மீண்டும் விற்பனை செய்வதற்கும் வாங்குவதற்கும் குடும்பங்கள் இணையவழிச் சந்தைகளை பயன்படுத்தி வந்துள்ளன.

எனினும், பயன்படுத்திய பாடசாலை நீச்சல் உடைகளுக்கு சிலர் தவறான நோக்கத்துடன் ஆர்வம் காட்டுவதாகத் தெரிவித்து, அவற்றின் விற்பனையை மெர்காரி நிறுவனம் தடை செய்துள்ளது.

பயன்படுத்திய பாடசாலை நீச்சல் உடைகள் குறிப்பிட்ட சிலரால் தவறான கண்ணோட்டத்தில் பார்க்கப்படுவதாகவும், குறிப்பாக அவை ஏற்கனவே பயன்படுத்தப்பட்டவையாக இருப்பது சில வாங்குபவர்களுக்கு ஈர்ப்பாக அமைவதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இத்தகைய நோக்கத்துடன் மேற்கொள்ளப்படும் விற்பனைப் பரிவர்த்தனைகளை ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என எச்சரித்துள்ள நிறுவனம், தடையை மீறி விற்பனை செய்ய முயற்சிக்கும் நபர்களின் கணக்குகள் முடக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.

Bootstrap