தாய்லாந்தில் உள்ள பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது. இதனையடுத்து, எதிர்வரும் 10ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரை 5 நாட்களுக்கு பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தாய்லாந்து தலைநகர் பெங்கொக்கில் இருந்து வடமேற்கே அமைந்துள்ள நொந்தபுரி மாகாணத்தில் உள்ள அரச உயர்நிலைப் பாடசாலை ஒன்றில் நேற்று வழமைபோல் வகுப்புகள் இடம்பெற்றுக்கொண்டிருந்தன.
இதன்போது, குறித்த பாடசாலையில் கல்வி பயிலும் 14 வயது மாணவர் ஒருவர் தன்னிடமிருந்த துப்பாக்கியால் பாடசாலையில் இருந்தவர்களை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூட்டுச் சத்தம் கேட்டதும், அச்சமடைந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள வகுப்பறைகளில் இருந்து வெளியேறி நாலாபுறமும் ஓடியுள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் பாடசாலை ஊழியர்கள் உள்ளிட்ட 6 பேர் உயிரிழந்ததாக ஆரம்பத்தில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தாய்லாந்து அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.