அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கனடா குறித்தும் அந்நாட்டின் தலைவர்கள் குறித்தும் "மோசமானவர்கள்" (Nasty) என விமர்சித்ததைத் தொடர்ந்து, கனடாவின் புதிய பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) அதற்குப் பதிலடி கொடுத்துள்ளார்.
லாஸ் வேகாஸில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பேசிய டிரம்ப், "கனடாவின் மக்கள் நல்லவர்கள், ஆனால் அவர்களின் தலைமை மிகவும் மோசமானது (Nasty leadership)" எனக் கடுமையாகச் சாடினார். மேலும், ஆகஸ்ட் 19 முதல் கனடா பொருட்கள் மீது 50% வரை கூடுதல் சுங்கவரி விதிக்கப்படும் என்றும் எச்சரித்தார்.
டிரம்பின் இந்த விமர்சனத்திற்குப் பதிலளித்த பிரதமர் மார்க் கார்னி, "நீங்கள் எந்த வார்த்தையைப் பயன்படுத்தினாலும் சரி, இது கனடா தொழிலாளர்கள் மற்றும் வணிகங்களின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்கான கடினமான போராட்டம். அவர்களின் நலனுக்காகவே நாங்கள் உறுதியாக நிற்கிறோம்" எனக் கூறினார்.
அமெரிக்கா விதித்துள்ள சுங்கவரிகளால் அந்நாட்டிலேயே அலுமினிய விலை 58% வரை உயர்ந்துள்ளதாகச் சுட்டிக்காட்டிய கார்னி, இந்தச் சுங்கவரிப் போர் அமெரிக்க நிறுவனங்களுக்கும் பாதிப்பையே ஏற்படுத்தும் எனக் குறிப்பிட்டார.
வர்த்தகப் போரினால் இரு நாடுகளுக்கும் இடையே கடுமையான முரண்பாடுகள் நிலவியபோதிலும், வாஷிங்டனில் இருநாட்டுப் பிரதிநிதிகளுக்கிடையேயான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.