வடஅமெரிக்க நாடான கனடாவில் தங்கியிருந்த இந்தியர்களுக்குப் பேரிடியாக, 2026 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மட்டும் 3,323 இந்தியர்களை அந்நாட்டு அரசு நாடு கடத்தியுள்ளதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது, இதே காலகட்டத்தில் அமெரிக்கா நாடு கடத்திய இந்தியர்களின் எண்ணிக்கையை விடக் கிட்டத்தட்ட மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
கனடாவில் குடிவரவு மற்றும் விசா விதிகளை மீறியவர்கள், போலி ஆவணங்கள் மூலம் தங்கியிருந்தவர்கள் மற்றும் விசா காலம் முடிந்த பின்னரும் சட்டவிரோதமாகத் தங்கியிருந்தவர்களைக் கண்டறிந்து வெளியேற்றும் நடவடிக்கையைக் கனடா அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, 2026 ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலகட்டத்திலேயே இந்தியர்கள் அதிகாரப்பூர்வமாகச் சொந்த நாட்டிற்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
தற்போது வெளியாகியுள்ள புள்ளிவிவரங்களின்படி, மேலும் 7,669 இந்தியர்கள் கனடாவிலிருந்து வெளியேற்றுவதற்கான தற்காலிகப் பட்டியலில் (Removal in Progress) சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான சட்டப்பூர்வ ஆவணங்கள் மற்றும் விசா நிலை குறித்த பரிசீலனைகள் நடைபெற்று வரும் நிலையில், விரைவில் இவர்கள் அனைவரும் இந்தியாவிற்குத் திருப்பி அனுப்பப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கனடாவில் உயர்கல்வி பயிலவும் பணிபுரியவும் லட்சக்கணக்கான இந்தியர்கள் சென்று வரும் சூழலில், அந்நாட்டு அரசு எடுத்து வரும் இந்த அதிரடி நடவடிக்கைகள் இந்தியச் சமூகத்தினர் மற்றும் மாணவர்களிடையே பெரும் கவலையையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.