களுத்துறை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள தமது சகோதரரைப் பார்ப்பதற்காக, உணவில் போதைப்பொருளை மறைத்து எடுத்துச் சென்ற இருவரை அங்குறுவாதொட்ட காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ஹொரண பிரதேசத்தைச் சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
போதைப்பொருள் குற்றச்சாட்டு தொடர்பாகக் கைது செய்யப்பட்டு களுத்துறை சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தமது சகோதரரைப் பார்ப்பதற்காக, இவர்கள் இருவரும் உந்துருளியில் பயணித்துக் கொண்டிருந்த போதே கைது செய்யப்பட்டுள்ளனர்.
மில்லனிய - பட்டகொட வீதியில் சோதனையில் ஈடுபட்டிருந்த காவல்துறை அதிகாரிகளால், வீதித் தடையொன்றில் வைத்து இவர்கள் பரிசோதிக்கப்பட்டனர்.
இதன்போது, அவர்கள் கொண்டு வந்த இரண்டு உணவுப் பொதிகளில் இருந்த 'சில்லி பேஸ்ட்' (Chili Paste) பொலித்தீன் பைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 12,400 மில்லிகிராம் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
வீதித் தடைக்கு சற்றுத் தொலைவில் உந்துருளியை நிறுத்தி, சந்தேகத்துக்கிடமான முறையில் நடந்துகொண்டதாலேயே காவல்துறை அதிகாரிகள் அவர்களைப் பரிசோதித்துள்ளனர்.
இதன்போது, அவர்கள் பயணித்த உந்துருளி மற்றும் கைபேசி என்பன காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
அதேநேரம், கைது செய்யப்பட்ட நபர்களுக்கு எதிராக ஏற்கனவே நீதிமன்றத்தில் போதைப்பொருள் தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அங்குறுவாதொட்ட காவல்துறை பொறுப்பதிகாரி தலைமையிலான அதிகாரிகள் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.