போரில் ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு உள்பட ஈரான் விதித்த நிபந்தனைகளை அமெரிக்கா நிறைவேற்றும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது என ஈரான் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், ஹோர்முஸ் தொடர்பாக ஓமனுடன் நடைபெறும் பேச்சுவார்த்தைகள் இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளன என்று ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார்.
ஆனால், ஹோர்முஸ் மீண்டும் திறக்கப்படுவது அமெரிக்கா ஜூன் மாத ஒப்பந்தத்தை மீறியதற்கான இழப்பீடு வழங்குவது மற்றும் பிற நிபந்தனைகளுக்கு உட்படுவதைப் பொறுத்து அமையும் என்றும் அவர் தெரிவித்தார்.
அமெரிக்காவுடன் ஈரான் பேச்சுவார்த்தை நடத்துவதாக வெளியான செய்திகளை மறுத்த அவர், அவர்கள் இடைத்தரகர்கள் வழியே செய்திகளைப் பரிமாறிக் கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஈரான் பாதுகாப்புத் துறை தலைமை அதிகாரி முகமது பாகர் சுல்காதர் கூறுகையில், ஹோர்முஸை மீண்டும் திறப்பதற்கான கோரிக்கைகளில், ‘லெபனான், பாலஸ்தீனம், ஏமன், ஈராக் போன்ற ஈரானின் நட்பு நாடுகளில் போர் நடவடிக்கைகளுக்கு முடுவு கட்டுவதும் அடங்கும்’ எனக் கூறினார்.
"எங்கள் நிபந்தனைகள் அனைத்தையும் அமெரிக்கா ஏற்கும் வரை ஹோர்முஸ் நீரிணையை மூடப்படும். இது வெறும் நீர்வழிப் பாதை மட்டுமல்ல, உண்மையில் இது ஒரு போர்க்களம்” என்று ஈரான் புரட்சிகரக் பொலிஸ் படையினர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.