வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கான 60 நாள் அவகாசத்தை நீக்க அமெரிக்கா திட்டம்

அமெரிக்காவில் வேலை இழக்கும் சில வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு புதிய வேலைவாய்ப்பைத் தேடுவதற்காக வழங்கப்படும் 60 நாள் அவகாசத்தை நீக்குவது குறித்து அமெரிக்க அரசு பரிசீலித்து வருகின்றது.

இந்த முன்மொழிவு தற்போது வெள்ளை மாளிகையின் மேலாண்மை மற்றும் வரவு செலவுத் திட்ட அலுவலகத்தின் பரிசீலனையில் உள்ளதுடன், இதுவரை இறுதி விதியாக்கப்படவில்லை. முன்மொழியப்பட்ட மாற்றங்களின் முழுமையான விவரங்களும் இன்னும் பொதுமக்களுக்கு வெளியிடப்படவில்லை.

தற்போதைய விதிமுறைகளின்படி, வேலை இழக்கும் குறிப்பிட்ட வகை குடியேறாத வெளிநாட்டுத் தொழிலாளர்கள், புதிய வேலைவாய்ப்பைத் தேடுவதற்காக அதிகபட்சமாக 60 நாட்கள் அமெரிக்காவில் தங்கியிருக்க முடியும். அல்லது அவர்களது அங்கீகரிக்கப்பட்ட தங்கும் காலம் அதற்கு முன்னதாக முடிவடைந்தால், அந்தக் காலம் வரை மட்டுமே தங்க அனுமதிக்கப்படுவர்.

இந்த அவகாசம் 2017ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் வேலை இழந்த வெளிநாட்டுத் தொழிலாளர்கள் புதிய முதலாளியைத் தேடுதல், புதிய விசாவிற்கு விண்ணப்பித்தல் அல்லது அமெரிக்காவில் சட்டப்பூர்வமாகத் தொடர்ந்தும் தங்குவதற்கான மாற்று வழிகளைப் பரிசீலித்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டது.

இந்த விதிமுறை நீக்கப்பட்டால், வேலை முடிவடைந்த பின்னர் குறித்த தொழிலாளர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்கள் அமெரிக்காவை விட்டு உடனடியாக வெளியேற வேண்டிய நிலை ஏற்படக்கூடும்.

மேலும், இந்த மாற்றம் இந்திய வெளிநாட்டவர் சமூகத்திலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். குறிப்பாக, திறன்மிகு வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கான H-1B விசா திட்டத்தின் முக்கிய பயனாளிகளாக இந்தியர்கள் நீண்டகாலமாக உள்ளனர்.

அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் தரவுகளின்படி, 2024ஆம் நிதியாண்டில் அங்கீகரிக்கப்பட்ட H-1B மனுக்களில் 71 சதவீதம் இந்தியாவில் பிறந்த பயனாளிகளுக்கானவையாக இருந்தன.

H-1B விசா மட்டுமன்றி, E-1, E-2, E-3, H-1B1, L-1, O-1 மற்றும் TN உள்ளிட்ட பல்வேறு வகையான விசாக்களைக் கொண்ட வெளிநாட்டுத் தொழிலாளர்களும் இந்த முன்மொழிவால் பாதிக்கப்படக்கூடும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், இந்த முன்மொழிவு இன்னும் இறுதி செய்யப்படாத நிலையில், 60 நாள் அவகாசத்தை நீக்குவது தொடர்பான இறுதி முடிவு இதுவரை எடுக்கப்படவில்லை.

Bootstrap