டெய்லர் ஸ்விஃப்ட் கச்சேரி டிக்கெட் மோசடி: 2.65 லட்சம் டொலர் திருடிய ஒன்டாரியோ தம்பதிக்கு தண்டனை!

கனடாவின் ஒன்டாரியோவைச் சேர்ந்த தம்பதியொன்று, பிரபல பாடகி டெய்லர் ஸ்விஃப்ட்டின் இசைக்கச்சேரி டிக்கெட்டுகளைத் தருவதாகக் கூறி பலரிடம் சுமார் 265,000 கனடிய டாலர்கள் மோசடி செய்த வழக்கில், அவர்களுக்கு வரும் அக்டோபர் 6-ஆம் திகதி தண்டனை விவரங்கள் அறிவிக்கப்படவுள்ளன.

டெனிஸ் டிசோர் மற்றும் அவரது வாழ்க்கைத் துணை டேவிட் பிளேக் ஆகிய இருவரும் நீதிமன்றத்தில் தங்கள் குற்றங்களை ஒப்புக்கொண்டுள்ளனர்.

டிசோர் பொதுமக்கள் மீது மோசடி செய்த குற்றத்தையும், பிளேக் குற்றவியல் மூலம் பெறப்பட்ட சொத்துக்களை வைத்திருந்த குற்றத்தையும் ஏற்றுக்கொண்டனர்.

ரொறன்ரோவில் 2024 நவம்பரில் நடைபெற்ற டெய்லர் ஸ்விஃப்ட்டின் 6 கச்சேரிகளுக்கான டிக்கெட்டுகளை வாங்குவதற்காக 107 பேர் டிசோரிடம் பணம் கொடுத்துள்ளனர்.

சிலர் 2023 ஆகஸ்ட் மாதத்திலேயே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து, அந்த ஆண்டின் கிறிஸ்மஸ் பண்டிகைக்குத் தங்கள் குழந்தைகளுக்குப் பரிசளிக்கத் திட்டமிட்டிருந்ததாகத் தெரிவித்தனர்.

கச்சேரி தொடங்குவதற்குச் சில நாட்களுக்கு முன்புதான் டிக்கெட்டுகள் வழங்கப்படும் என டிசோர் உறுதியளித்திருந்தார்.

ஆனால், கச்சேரி நாளில் டிக்கெட்டுகளைப் பெற முயன்றபோதுதான் தாங்கள் ஏமாற்றப்பட்டதை மக்கள் உணர்ந்தனர். பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் பணத்தைத் திரும்பக் கேட்டபோது, மூன்றாம் தரப்பினர் யாரோ பணத்தைத் திருடிவிட்டதாக டிசோர் பொய் கூறியுள்ளார்.

ஆனால், இதில் வேறு எந்த நபரும் சம்பந்தப்படவில்லை என்பதும், திட்டமிட்டே இவர்கள் ஏமாற்றியுள்ளனர் என்பதும் விசாரணையில் அம்பலமானது. மேலும், இவர்கள் மோசடி செய்த தொகையைக் கொண்டு 2023 மற்றும் 2024-ஆம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலத்தில் பல்வேறு ஆன்லைன் சூதாட்டத் தளங்களில் பந்தயம் கட்டியது தெரியவந்துள்ளது.

இதே காலகட்டத்தில், இவர்கள் ஏடிஎம் மூலம் சுமார் 297,000 டொலர் ரொக்கப் பணத்தை 350 முறைகளாக எடுத்துப் பயன்படுத்தியுள்ளனர்.

இணையதளங்களில் "பிளாக்ஹாக் டெனிஸ்" என்ற பெயரில் வலம் வந்த டிசோர், நீதிமன்றத்தில் தனது செயலுக்கு மன்னிப்பு கோரியதுடன், அந்தச் சமயத்தில் தான் தீவிர ஆன்லைன் சூதாட்டப் பழக்கத்திற்கு அடிமையாகியிருந்ததாகத் தெரிவித்தார்.

Bootstrap