ஓமானுடனான ஒப்பந்தத்திற்கு தயார் – ஈரான் அறிவிப்பு

ஹோர்முஸ் நீரிணை வழியாக புதிய கடல்சார் போக்குவரத்துப் பாதைகளை வரைவு செய்வதற்காக ஓமான் நாட்டுடன் இறுதி ஒப்பந்தத்தில் கையெழுத்திடத் தயாராக இருப்பதாக ஈரான் அறிவித்துள்ளது.

இருப்பினும், அமெரிக்கா தனது நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யும் வரை இந்த முக்கிய கடல் பாதையை மீண்டும் திறக்க முடியாது என்று ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராகச்சி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

கடந்த பெப்ரவரி மாத இறுதியில் அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான் இந்த கடல் பாதையை மூடியது. ஜூன் மாதம் எட்டப்பட்ட இடைக்கால ஒப்பந்தத்தை அமெரிக்கா மீறிவிட்டதாகக் குறிப்பிட்ட வெளியுறவு அமைச்சர், இனி அமெரிக்காவுடன் நேரடிப் பேச்சுவார்த்தை கிடையாது என்றும், மத்தியஸ்தர்கள் வாயிலாக மட்டுமே கருத்துப் பரிமாற்றங்கள் நடைபெறும் என்றும் தெளிவுபடுத்தியுள்ளார்.

அதேவேளையில், ஈரானின் பொருளாதார நெருக்கடிகளைக் உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும், உடனடியாகத் தலையிடும் எண்ணம் இல்லை என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ஹோர்முஸ் நீரிணையை திறக்க ஈரான் விதித்துள்ள முக்கிய நிபந்தனைகள்:

அமெரிக்கத் தாக்குதல்களால் ஏற்பட்ட சேதங்களுக்கு உரிய இழப்பீட்டை அமெரிக்கா வழங்க வேண்டும்.

ஈரானுக்கு எதிரான இராஜதந்திர அச்சுறுத்தல்கள் மற்றும் லெபனான், பாலஸ்தீனம், ஏமன், ஈராக் ஆகிய நாடுகளில் உள்ள ஈரான் ஆதரவுப் படைகள் மீதான தாக்குதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும்.

பாரசீக வளைகுடா பகுதியில் அமெரிக்க கடற்படையின் சோதனைகளை முடிவுக்குக் கொண்டுவருவதுடன், விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளை நீக்கி, முடக்கி வைக்கப்பட்டுள்ள ஈரானிய சொத்துக்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்.

Bootstrap