அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் தேர்தல் பிரச்சாரக் கணக்குகள் (@TeamTrump) மற்றும் வெள்ளை மாளிகையின் சமூக வலைத்தளப் பக்கங்களில் பயன்படுத்தப்பட்ட பாப் பாடகி டெய்லர் ஸ்விஃப்ட்டின் (Taylor Swift) பாடல்கள் நீக்கப்பட்டு, அந்த வீடியோக்களின் ஒலி அமைதிப்படுத்தப்பட்டுள்ளது (Muted).
ட்ரம்ப் பிரச்சாரப் பக்கத்தில் ஸ்விஃப்ட்டின் புகழ்பெற்ற பாடல்களின் வரிகளை மாற்றி அமைத்து அமைக்கப்பட்ட டிக்டாக் வீடியோக்களிலிருந்து பின்னணி இசை நீக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் வெளியிடப்பட்ட சில வீடியோக்களில் பயன்படுத்தப்பட்ட August, High Infidelity, Father Figure போன்ற பாடல்களின் ஆடியோ பதிவுகளும் நீக்கப்பட்டுள்ளன.
டிக்டாக்கில் இந்த வீடியோக்களைப் பார்க்கும்போது, "பதிப்புரிமை உரிமையாளர் இந்த ஒலியை உங்கள் நாட்டில் கிடைக்கச் செய்யவில்லை" (The copyright owner hasn't made this sound available) என்ற அறிவிப்பு தோன்றுகிறது. இது டெய்லர் ஸ்விஃப்ட் அல்லது அவரது இசை நிறுவனத்தின் காப்புரிமை நடவடிக்கையால் நேர்ந்துள்ளது.
அரசியல் பிரச்சாரங்களுக்குத் தங்களது பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்துவதற்குச் சப்ரினா கார்பெண்டர் (Sabrina Carpenter), அரியானா கிராண்டே (Ariana Grande), கேட்டி பெர்ரி (Katy Perry) போன்ற பல பிரபல பாடகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். டெய்லர் ஸ்விஃப்ட் முன்னதாக 2024 தேர்தலில் கமலா ஹாரிஸுக்கு ஆதரவு அளித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.