கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாநிலத்தில் உள்ள சம்மர்லேண்ட் (Summerland) பகுதியில் வேகமாக பரவிய காட்டுத்தீ காரணமாக, தனது குடும்பத்தினருடன் வீட்டை விட்டு வெளியேற முயன்ற 80 வயது மூதாட்டி உயிரிழந்தார்.
'பால்ட் ரேஞ்ச்' (Bald Range) என அழைக்கப்படும் இந்த காட்டுத்தீ 136 சதுர கிலோமீட்டர் பரப்பளவிற்கு பரவியுள்ளது. இதன் காரணமாக 12,000-க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளனர்.
சம்மர்லேண்ட் நகர மையப் பகுதி சேதமடையாமல் தப்பியது; எனினும் சுற்றியுள்ள பகுதிகளில் பல கட்டடங்கள் தீயில் சேதமடைந்துள்ளன.
காட்டுத்தீயின் அடர்ந்த புகை காரணமாக அருகில் உள்ள கேலோனா (Kelowna) விமான நிலையத்தில் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அப்பகுதியில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டு, மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.