கனடாவின் ஒட்டாவா (Ottawa) நகரில் இரவு நேர பொழுதுபோக்குகளை ஊக்குவிக்கும் வகையில், அதிகாலை வரை இயங்கும் இரவு விடுதிகள் மற்றும் இசைக்கூடங்களுக்கான (Clubs & Music Venues) அனுமதி விதிமுறைகளில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.
2027 முதல், அதிகாலை 3 மணிக்கு மேல் இயங்கும் நிகழ்ச்சிகளுக்கு ஒவ்வொரு முறையும் தனித்தனியாக அனுமதி பெறத் தேவையில்லை. மாறாக, குறிப்பிட்ட விடுதிகளுக்கு ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் உரிமம் (Annual Permit) வழங்கப்படும். இந்த மாற்றத்திற்கு ஒட்டாவா நகர சபை ஜூன் 24 அன்று ஒப்புதல் அளித்தது.
முந்தைய விதிகளின்படி, ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் தனித்தனியாக விண்ணப்பித்து ஆய்வுகளுக்கு (Inspections) உட்படுத்தப்பட வேண்டியிருந்தது. புதிய முறையால் இந்த நீண்ட நடைமுறைகளும், அதிகபடியான நிர்வாகச் சுமைகளும் குறையும் என அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
புதிய அனுமதி விதிகள் மூலம் நிகழ்ச்சிகளை அதிகாலை வரை நடத்த முடியுமே தவிர, மதுபானம் விற்பனை செய்வதற்கான நேர வரம்பில் மாற்றமில்லை. மாகாண விதிகளின்படி அதிகாலை 2 மணி வரை மட்டுமே மது விற்பனை செய்ய அனுமதி உண்டு.
நிகழ்ச்சிகள் நீண்ட நேரம் நடப்பதால், டிஜே (DJ) கலைஞர்கள் தங்களின் சிறந்த பாடல்களை மட்டும் அவசர அவசரமாக இசைக்காமல், புதுமையான மற்றும் ஆக்கப்பூர்வமான இசையை வழங்கும் வாய்ப்பு கிடைக்கும்.
தற்காலத்தில் மக்கள் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துவதால், இரவு நேர விருந்துகளில் ஆற்றல் பானங்கள் (Energy drinks), பழச்சாறுகள் மற்றும் ஆல்கஹால் இல்லாத பானங்களுக்கான தேவை அதிகரித்துள்ளதாக விடுதி உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.