கனடாவின் நோவா ஸ்கோடியா (Nova Scotia) மாகாணத்தைச் சேர்ந்த ஜாக் சல்லிவன் மற்றும் லிலி சல்லிவன் என்ற இரு சிறுவர்கள் காணாமல் போய் 15 மாதங்கள் கடந்துள்ள நிலையில், அவர்களின் தாய் மலீயா புரூக்ஸ்-முர்ரே (Malehya Brooks-Murray) முதன்முறையாக மௌனம் கலைத்துப் பேசியுள்ளார்.
மே 2, 2025 அன்று லான்ஸ்டவுன் (Lansdowne) பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து 4 வயதுடைய ஜாக்கும், 6 வயதுடைய லிலியும் திடீரெனக் காணாமல் போனார்கள். அதன் பிறகு எடுக்கப்பட்ட பிரம்மாண்ட தேடுதல் வேட்டையிலும் அவர்கள் கண்டறியப்படவில்லை.
பொதுமக்களின் விமர்சனங்களுக்குப் பதிலளித்த மலீயா, தான் அமைதியாக இருந்ததற்கு காவல்துறையின் (RCMP) வழிகாட்டுதலே காரணம் என்றும், வழக்கில் எந்தச் சிக்கலும் வரக்கூடாது என்பதற்காகவே அவ்வாறு நடந்துகொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கில் காவல்துறை இரண்டு முறை பொய் கண்டறியும் சோதனைகளை (Polygraph tests) மலீயாவிடம் நடத்தியுள்ளது. இருப்பினும், தான் எந்தவிதக் குற்றத்திலும் ஈடுபடவில்லை என்றும், குழந்தைகள் இன்னும் உயிரோடு இருப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் காத்திருப்பதாகவும் அவர் கூறுகிறார்.
குழந்தைகள் யாரோ ஒருவரால் கடத்தப்பட்டிருக்கக் கூடும் எனக் கருதும் அவர், உடனடியாக 'ஆம்பர் அலர்ட்' (Amber Alert) எச்சரிக்கை விடுக்கப்படாதது குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார்.
தன் குழந்தைகள் மீண்டும் வீடு திரும்புவார்கள் என்ற நம்பிக்கையில், அவர்களுக்கான பிறந்தநாள் மற்றும் பண்டிகை பரிசுகளைத் தொடர்ந்து வாங்கிச் சேகரித்து வருகிறார். மேலும், அவர்களின் நினைவாகத் தான் தயாரித்த கலைப் பொருட்களை வைத்திருப்பதுடன், சமூகப் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.