கனடாவின் ஒட்டாவா நகரில் ஈ-ஸ்கூட்டர்களின் தவறான பயன்பாடு மற்றும் விதிமீறல்களைத் தடுக்கும் வகையில், பொலிஸார் நகரம் முழுவதும் தீவிரக் கண்காணிப்பு மற்றும் சோதனைகளைத் தொடங்கியுள்ளனர்.
குறிப்பாக ஃபைண்ட்லே க்ரீக் மற்றும் ரிவர்சைடு சவுத் ஆகிய பகுதிகளில் சிறுவர்கள் ஸ்கூட்டர் ஓட்டுவது, அதிக வேகம் மற்றும் பாதுகாப்பற்ற முறையில் பயணிப்பது ஆகியவற்றைக் கண்காணிக்க சிறப்பு ரோந்து நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
ஒட்டாவாவில் ஈ-ஸ்கூட்டர் ஓட்டுவதற்கு குறைந்தபட்ச வயது 16 ஆகும். 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் இதனைப் பயன்படுத்த முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
18 வயதுக்குட்பட்ட அனைத்துப் பயனர்களும் கட்டாயம் பாதுகாப்பு தலைக்கவசம் அணிய வேண்டும். தவறினால் 80 டாலர் அபராதம் விதிக்கப்படும். 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் ஈ-ஸ்கூட்டர் ஓட்டினால் சுமார் 170 டொலர் வரை அபராதம் விதிக்கப்படும்.ஈ-ஸ்கூட்டர்களின் அதிகபட்ச வேகவரம்பு மணிக்கு 24 கிலோ மீற்றராகும்.
அண்மையில் அதிகபட்சமாக மணிக்கு 52 கிலோ மீற்றர் வேகத்தில் பயணித்த நபரை பொலிஸார் பிடித்துள்ளனர்.
அதிவேகமாகச் செல்பவர்கள் மீது நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும். மாற்றுத்திறனாளிகளின் பாதுகாப்பைக் கருதி, நடைபாதைகளில் ஈ-ஸ்கூட்டர்களை ஓட்டக் கூடாது எனவும் ஒரு ஸ்கூட்டரில் ஒருவர் மட்டுமே பயணிக்க வேண்டும். பிற வாகனங்களையோ அல்லது ஸ்கேட்போர்டுகளையோ இழுத்துச் செல்லக் கூடாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒட்டாவா கிழக்கு ஒன்டாரியோ சிறுவர் மருத்துவமனை, டோரண்டோவின் சிக்-கிட்ஸ் மற்றும் மொண்ட்ரியால் சிறுவர் மருத்துவமனைகள் வெளியிட்ட தகவலின்படி, ஈ-ஸ்கூட்டர் விபத்துகளால் காயமடைந்து வரும் குழந்தைகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.
மே 2025 வரை வரையிலான ஓராண்டு காலத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 50% அதிகரித்துள்ளது. சிறுவர்கள் அறியாமையால் ஆபத்தான முறையில் ஸ்கூட்டர்களை இயக்கக்கூடும்.
எனவே, 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஈ-ஸ்கூட்டர்களை வாங்கித் தருவதற்கு முன்பாக பெற்றோர் இருமுறை யோசிக்க வேண்டும்," என ஒட்டாவா பொலிஸ் அதிகாரி ஜோஷ் கலாஹன் வலியுறுத்தியுள்ளார்.