தென்மேற்கு பருவக்காற்று , 'குஜிரா' மற்றும் 'டொல்பின்' ஆகிய சூறாவளிகளின் தாக்கம் காரணமாக பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி குறைந்தது 12 பேர் உயிரிழந்துள்ளதுடன், 8 பேரைக் காணவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடிமைப் பாதுகாப்பு அலுவலகத்தின் உதவிச் செயலாளர் லாரன்ஸ் மீனா, இச்சம்பவங்களில் 11 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அந்நாட்டின் ஒன்பது பிராந்தியங்கள் மற்றும் 33 மாகாணங்களைச் சேர்ந்த சுமார் 586,000 பேர் அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், சில பிராந்தியங்களை சேர்ந்த 4,866 பேர் முன்கூட்டியே பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
32,800-க்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்து, தற்போது முகாம்கள் மற்றும் உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.