கன்னட திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ரேணுகாசுவாமி மரண வழக்கில், 14-வது குற்றவாளியான பிரதோஷ் நீதிமன்றத்தில் மன்னிப்பு சாட்சியாக மாறுவதற்கும் சட்டப்பூர்வ மன்னிப்பு கோரியும் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கில் முதன்மை குற்றவாளியான பிரபல நடிகர் தர்ஷன் மற்றும் அவரது தோழி பவித்ரா கவுடா உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், பிரதோஷ் தாக்கல் செய்துள்ள மனுவில் ரேணுகாசுவாமிக்கு நேர்ந்த கொடூரங்கள் மற்றும் மரணத்தை மறைக்க நடந்த சதித் திட்டங்கள் குறித்த புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
மரணத்தை மறைக்கவும் திசைதிருப்பவும் நடந்த சதி ரேணுகாசுவாமி உயிரிழந்ததை அறிந்ததும், வழக்கை திசைதிருப்ப முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில்,தர்ஷன் துப்பாக்கியால் தம்மை மிரட்டியதால், அவருக்கு உதவ வேண்டிய சூழல் ஏற்பட்டதாக மனுதாரரான பிரதோஷ் தமது மனுவில் தெரிவித்துள்ளார்.
அத்துடன் தனக்குத் தெரிந்த அனைத்து உண்மைகளையும் முழுமையாக வெளிப்படுத்தத் தயாராக இருப்பதாகக் கூறி மன்னிப்பு சாட்சியாக மாற பிரதோஷ் தமது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி, சிறையில் தனி அறையில் அடைக்கவும், நீதிமன்ற விசாரணையின் போது தனியாக அழைத்து வரவும் பிரதோஷ் தனிப் பாதுகாப்பு மனுவையும் தாக்கல் செய்துள்ளார்.