2026 மிஸ் யுனிவர்ஸ் கனடா (Miss Universe Canada) அழகிப் போட்டியில், போட்டியாளர்கள் அணிந்திருந்த ஆடைகள் பழங்குடியினரின் கலாச்சாரத்தைச் சீரழிக்கும் வகையில் இருந்ததாகக் கடுமையான விமர்சனம் எழுந்துள்ளது.

ஒன்டாரியோவின் விண்ட்சரில் நடைபெற்ற தேசிய பாரம்பரிய ஆடைப் போட்டியின் போது, கரிசா ஹேவர்கேம்ப் (Karisa Haverkamp) என்ற போட்டியாளர் இறகுகளால் ஆன தலையணி அணிந்தும், கன்னத்தில் சிவப்பு நிறக் கைரேகை (காணாமல் போன மற்றும் கொல்லப்பட்ட பழங்குடி பெண்களின் குறியீடு) வரைந்தும் மேடையில் வந்தார். ஜஸ்லீன் கைலி (Jasleen Kaily) என்ற மற்றொரு போட்டியாளர் "ஆர்க்டிக் பியூட்டி" என்ற பெயரில் இரண்டு துண்டு ஆடையை அணிந்து வந்தார்.

 இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய முன்னாள் மிஸ் யுனிவர்ஸ் கனடா வெற்றியாளரான ஆஷ்லி காலிங்புல் (Ashley Callingbull), மேடையில் நிகழ்ச்சியை இடைநிறுத்தி தனது எதிர்ப்பைப் பதிவிட்டார். பழங்குடியினரின் புனிதமான அடையாளங்களை வெறும் ஆடையாகப் பயன்படுத்துவது தவறு என்றும், இதிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு திருந்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மிஸ் யுனிவர்ஸ் கனடா அமைப்பின் இயக்குனர் சோனி போரெல்லி (Sonny Borrelli) மற்றும் நிர்வாகம் இதற்காகப் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டதுடன், இனிவரும் போட்டிகளில் கலாச்சார வழிகாட்டுதல்களை உருவாக்க ஆஷ்லி காலிங்புல் கலாச்சார ஆலோசகராகச் செயல்படுவார் என்றும் அறிவித்தனர்.

சர்ச்சைக்குரிய ஆடைகளை அணிந்த இரு போட்டியாளர்களும் தங்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் யாருடைய மனதையும் புண்படுத்துவது தங்களின் நோக்கமல்ல என்று கூறி மன்னிப்புக் கேட்டுள்ளனர்.

Bootstrap