காரின் கூரை மீது ஏறிச் சென்ற இளைஞர்

கனடாவின் நியூ பிரன்சுவிக் (New Brunswick) மாகாணத்தில் உள்ள மான்ட்டன் நகரில், ஆபத்தான முறையில் இயக்கப்பட்ட ஒரு காரின் கூரை மீது இளைஞர் ஒருவர் ஏறிச் சென்ற காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக மூன்று இளைஞர்களைக் காவல்துறையினர் (RCMP) கைது செய்துள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை மதியம், மான்ட்டனில் உள்ள வாகன் ஹார்வி பவுலேவார்டு (Vaughn Harvey Boulevard) பகுதியில் வேகமாகச் சென்ற காரின் கூரையின் மீது ஒரு வாலிபர் நின்றுகொண்டும், மற்றொருவர் ஓட்டுனர் பக்கத்து சன்னல் வழியாக வெளியே தொங்கிக்கொண்டும் சென்றுள்ளனர்.

காவல் துறையின் விசாரணையில், அந்த வாகனம் மான்ட்டனின் மற்றொரு பகுதியில் இருந்து திருடப்பட்டது என்பது தெரியவந்தது.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து, அதே காரில் வந்த இளைஞர்கள் ஸ்கூடூக் (Scoudouc) பகுதியில் வீடு புகுந்து திருட முயன்றதாகவும், பின்னர் மெம்ராம்கூக் (Memramcook) பகுதியில் காரை பள்ளத்தில் இறக்கிவிட்டுத் தப்பியோட முயன்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 இச்சம்பவத்தில் தொடர்புடைய 16 வயது சிறுவன், 14 வயது சிறுவன் மற்றும் 16 வயது சிறுமி ஆகிய மூவரை காவல்துறையினர் கைது செய்து, பின்னர் நீதிமன்றத்தில் ஆஜராகும் நிபந்தனையுடன் விடுவித்துள்ளனர்.

நேரில் பார்த்தவரின் வாக்குமூலம்:

தன் கணவருடன் காரில் சென்றபோது இக்காட்சியைப் படம்பிடித்த கெல்வின்-ஆன் பால்கம் (Kelsie-Ann Balcom) கூறுகையில்:"அவர்கள் வாகனத்தின் மீது ஏறி கைகளைப் பிடிக்காமல் நின்றதைக் கண்டு நான் அதிர்ச்சியடைந்தேன். இந்த அளவுக்கு முட்டாள்தனமாக நடப்பார்களா என்று தோன்றியது. யாராவது கீழே விழுந்து விடுவார்களோ என்ற பயத்தில் கவலையடைந்தேன்," என்று தெரிவித்துள்ளார்.

மேலும், ஒய்.எம்.சி.ஏ (YMCA) பகுதி மற்றும் நடைபாதைகளில் இந்த வாகனம் மிக ஆபத்தான முறையில் இயக்கப்பட்டு, பிற வாகனங்கள் மீது மோதுவது போலச் சென்றதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

Bootstrap