இந்தியா - பாகிஸ்தான் பொருளாதாரம் 25 பைசாவும் 500 ரூபாயும் மாதிரி: 'ஆபரேசன் சிந்தூர்' புத்தகத்தை வெளியிட்ட அண்ணாமலை பேச்சு

கோவை பொள்ளாச்சி சாலை ஈச்சனாரி பகுதியில் உள்ள ரத்தினம் கல்லூரியில் சுதேசி மேளா நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் 'வீ தி லீடர்ஸ்' தலைவர் அண்ணாமலை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மேஜர் மதன்குமார் எழுதிய 'ஆபரேசன் சிந்தூர்' (Operation Sindoor) புத்தகத்தை வெளியிட்டு சிறப்புரையாற்றினார்.

நிகழ்வில் அண்ணாமலை பேசியதாவது:

”நாட்டுக்காக நமது இராணுவ வீரர்கள் எந்த அளவுக்கு தியாகங்களுடன் போராடுகிறார்கள் என்பதை ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டும். எனவே, இந்த புத்தகத்தை அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டும்.

'அமரன்' திரைப்படம் வெளியான பிறகு, மேஜர் முகுந்தனின் தந்தை மற்றும் தாயார் பட்டிதொட்டியெங்கும் மிகவும் பிரபலம் அடைந்துவிட்டனர். அவர்கள் நம் அனைவருக்கும் ஒரு சிறந்த இலக்கணமாகத் திகழ்கிறார்கள்.

உலகம் முழுவதும் தவறான செய்திகள் பரப்பப்பட்டபோது, யூடியூப் மூலம் 'ஆபரேசன் சிந்தூர்' குறித்து முழுமையாக விளக்கிப் பேசியவர் மேஜர் மதன்குமார் தான். மேஜர் மதன்குமார் பேசுவதுதான் நமக்கு உண்மையான செய்தி. இந்த காணொளிகள் மூலம் ஏராளமான குழந்தைகள் இந்திய இராணுவத்தைப் பற்றி தெரிந்து கொள்வார்கள்.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அப்துல் கலாம் ஐயாவிடம் ஏவுகணை (Missile) குறித்துப் பேசினார். அதனைத் தொடர்ந்து ராஜீவ் காந்தி கலாம் ஐயாவிடம் மற்றொரு ஏவுகணை பற்றி விவாதித்தார்.

பிற்காலத்தில் நரசிம்ம ராவ் அப்துல் கலாம் ஐயாவிடம் அணுச் சோதனைக்குத் தயாராகுமாறு கூறினார்.

அதனைத் தொடர்ந்து வாஜ்பாய் கலாம் ஐயாவிடம் "பட்டாசு வெடிக்க தயாராகுங்கள்" என்று கூறி பொக்ரான் பகுதியில் சோதனை நடத்த உத்தரவிட்டார். யாருக்கும் தெரியாமல் அந்த அணுச் சோதனையை அப்துல் கலாம் வெற்றிகரமாக செய்து முடித்தார்.

எனவே, மாமனிதர் அப்துல் கலாம் ஐயாவை எப்போதும் மறக்கக் கூடாது.

ஆபரேசன் சிந்தூர்' நடவடிக்கையின் மொத்தச் செலவு 408 மில்லியன் டாலர் ஆகும். எவ்வளவு பெரிய போராக இருந்தாலும் அதை எதிர்கொள்ளும் வலுவான பொருளாதாரம் நம்மிடம் உள்ளது. நம்முடைய பொருளாதாரத்திற்கும் பாகிஸ்தானின் பொருளாதாரத்திற்கும் உள்ள வித்தியாசம் என்பது 25 பைசாவுக்கும் 500 ரூபாய்க்கும் உள்ள வேறுபாட்டைப் போன்றது. நாம் பாகிஸ்தானுக்கு 14,500 கோடி ரூபாய் அளவுக்கு சேதம் விளைவித்துள்ளோம். எதிரிக்கு ஒரு அறை என்றால், நாம் நான்கு அறைகள் கொடுத்து பதிலடி தந்துள்ளோம்.

'ஆபரேசன் சிந்தூர்' நடவடிக்கைக்குப் பிறகு நமது நாட்டின் இராணுவத் தளவாடங்களின் வலிமையை உலக நாடுகள் உற்று நோக்கத் தொடங்கியுள்ளன. பெல்காம் தொடங்கி 'ஆபரேசன் சிந்தூர்' வரை அனைத்து முக்கியத் தகவல்களும் அடங்கியுள்ள இந்தப் புத்தகத்தை அனைவரும் படிக்க வேண்டும்.

இராணுவத்தைப் பொறுத்தவரை அனைத்து விஷயங்களையும் துல்லியமாகத் தெரிந்தவர்களே தேவைப்படுகிறார்கள். நமது நாட்டின் இளைஞர்கள் இதனைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்தியாவில் 'ஜென் ஸி' தலைமுறையினருக்குப் பெரிய அளவில் இன்னும் மதிப்புக் கொடுக்கப்படுவதில்லை. ஆனால், 'ஜென் ஸி' இளைஞர்களாகிய உங்களுக்கு மிகப்பெரிய இலக்கு (Purpose) உள்ளது. நீங்கள் அனைவரும் சீருடைப் பணியை (Uniform Service) நோக்கிச் செல்ல வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். மேலும், நல்லவர்களை எப்போதும் போற்றிப் பாராட்ட வேண்டும்”

இவ்வாறு அண்ணாமலை அந்த நிகழ்வில் பேசினார்.

இந்த எழுச்சிமிகு நிகழ்வில், மேஜர் முகுந்தனின் தந்தை வரதராஜன் உட்பட ஏராளமான முன்னாள் படைவீரர்களும், அவர்களின் குடும்பத்தினரும் மற்றும் மாணவர்களும் பெருமளவில் கலந்து கொண்டனர்.

Bootstrap