தலைப்பாகை அணிந்த மெக்சிகன் இளைஞர்: அமெரிக்காவை ஆச்சரியப்படுத்தும் பஞ்சாபி - ஸ்பானிஷ் இசைப் புரட்சி

கலிபோர்னியாவில் வாழும் மெக்சிகன் வம்சாவளி பாடகர் தாலிபெலிகோ (Talibelico) மற்றும் பஞ்சாபி லாரி ஓட்டுநரான ஹர்வீர் சிங் இணைந்து, பஞ்சாபி மற்றும் ஸ்பானிஷ் இசையைக் கலந்து புதிய இசை வடிவத்தை உருவாக்கி வருகின்றனர்.

கலிபோர்னியாவின் மோடெஸ்டோ நகரில், 28 வயதான தாலிபெலிகோ தலைப்பாகை, கேஷுவல் ஷர்ட் மற்றும் ஜீன்ஸ் அணிந்து வெளியே வரும்போது, அவர் குர்த்வாராவிற்குச் செல்கிறார் என்றே வழியில் காண்பவர்கள் நினைக்கிறார்கள். ஆனால், இந்த பாடகர் வழக்கமாக லோஸ் ஏஞ்சலஸில் நடைபெறும் இசை நிகழ்ச்சிக்குச் சென்று கொண்டிருப்பார். அங்கு இவரது பஞ்சாபி-ஸ்பானிஷ் கலப்பு இசை பெருமளவில் மக்களால் ரசிக்கப்பட்டு வருகிறது.

ஸ்பானிஷ் மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட தாலிபெலிகோ, கலிபோர்னியாவின் பஞ்சாபி மற்றும் மெக்சிகன் சமூகங்களுக்கு இடையே ஒரு பண்பாட்டுப் பாலமாக உருவெடுத்துள்ளார். பஞ்சாபி பாடகர் ஹர்வீர் சிங்குடனான கூட்டணி மூலமும், இணையத்தில் லட்சக்கணக்கான பார்வைகளைப் பெறும் வீடியோக்கள் மூலமும், இந்நகரத்தின் மறந்துபோன வரலாற்றுப் பக்கங்களை இவர் உயிர்ப்பித்து வருகிறார். அதுதான், ஒரு நூற்றாண்டுக்கு முன்பு பஞ்சாபி புலம்பெயர்ந்த குடும்பங்களுக்கும் மெக்சிகன் சமூகத்தினருக்கும் இடையே இருந்த திருமண மற்றும் கலாச்சார பந்தங்கள்.

கலிபோர்னியாவின் ரெட்வுட் சிட்டியில் பிறந்த இவரது இயற்பெயர் எஸ்ட்ராஸ் (Esdras - ஸ்பானிஷ் மொழியில் ‘கடவுளே என் துணை’ என்று பொருள்). மெக்சிகோவின் டிஜுவானாவில் தாய் வழியில் வளர்ந்த தாலிபெலிகோவுக்கு இசை இயல்பாகவே கைவந்தது. என் தாயின் குடும்பத்தில் அனைவரும் இசையில் மூழ்கியிருந்தார்கள். 1980-களில் அவர்களிடம் ஒரு பிரபல இசைக்குழுவும் இருந்தது என்கிறார். 3 ஆண்டுகளுக்கு முன்பு மோடெஸ்டோவின் சீக்கிய சமூகத்தைப் பார்த்தபோது, சீக்கிய மதத்தின் மீது இவருக்கு ஆர்வம் ஏற்பட்டது. எனக்கு ஆர்வம் அதிகமாகி, இணையத்தில் தலைப்பாகை எப்படி கட்டுவது, அதன் முக்கியத்துவம் மற்றும் பொறுப்புகள் என்ன என்பதையெல்லாம் தேடிப் படித்தேன். அது மிகவும் அழகாகவும், கம்பீரமாகவும் இருந்தது என்கிறார். தலைப்பாகை தன்னை மாற்றியதாகக் கூறும் அவர், "நான் வேறு ஒரு உணர்வைப் பெறுகிறேன்; ஒரு சக்திவாய்ந்த ஆற்றல் எனக்குள் பாய்வது போல் இருக்கிறது. அது சுமந்து நிற்கும் மரியாதையையும், பொறுப்பையும், அதன் ஆழமான தனிப்பட்ட முக்கியத்துவத்தையும் நான் கற்றுக்கொண்டு வருகிறேன் என்கிறார்.

ஹர்வீர் சிங்குடன் இணைந்து பாடும்போது, முதன்முதலில் அவர் தலைப்பாகை அணிந்து ஸ்பானிஷ் பாடுவதைப் பார்த்தேன். 'இது மிகவும் நன்றாக இருக்கிறதே' என்பதுதான் எனது முதல் எதிர்வினையாக இருந்தது," என்கிறார் சீக்கிய அமெரிக்க சமூக ஆய்வாளர் தேஜ்பால் சிங் பைனிவால். தாலிபெலிகோவுக்கு இது வெறும் புதுமை அல்ல, மாறாக வரலாறு. "வரலாற்று ரீதியாக, பஞ்சாபி ஆண்கள் மெக்சிகன் அல்லது ஹிஸ்பானிக் பெண்களைத் திருமணம் செய்துகொண்டனர். ஆனால் பலருக்கு அந்த வரலாறு தெரியாது. இந்தத் தொடர்பின் செய்தி மிகவும் வலிமையானது. நாம் இணைய வேண்டும்," என்கிறார்.

யுசி இர்வின் (University of California, Irvine) பல்கலைக்கழகத்தின் ஓய்வுபெற்ற மானுடவியல் பேராசிரியர் கரேன் லியோனார்ட், 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கப் பத்தாண்டுகளில் கலிபோர்னியாவின் விவசாயப் பள்ளத்தாக்குகளில் பஞ்சாபி ஆண்களுக்கும் மெக்சிகன் பெண்களுக்கும் இடையே குறைந்தபட்சம் 385 திருமணங்கள் நடந்ததாகத் தனது ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். "எனது அனுபவத்தில், 1965-க்குப் பிறகு புலம்பெயர்ந்த பஞ்சாபி சீக்கியர்கள், இந்த இரு-கலாச்சார சமூக வரலாற்றைக் குறைவாகக் காட்டவே முயன்றுள்ளனர்," என்று அவர் எழுதியுள்ளார்.

இன்று, கலிபோர்னியாவின் சென்ட்ரல் சான் ஜோவாக்கின் பள்ளத்தாக்கில் சுமார் 24 லட்சம் லத்தீனோ மக்கள் வாழ்கின்றனர் என்று 'தி சாக்ரமெண்டோ பீ' செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது. மேலும், அமெரிக்காவிலேயே அதிக எண்ணிக்கையிலான சீக்கியர்கள் வாழும் மாநிலமாக கலிபோர்னியா உள்ளது (சீக்கியக் கூட்டமைப்பின் மதிப்பீட்டின்படி சுமார் 2,50,000 பேர்).

தனது மேடைப் பெயரை 'தாலிஸ்மேன்' (தாயத்து) மற்றும் மெக்சிகன் நாட்டுப்புற இசை வடிவமான 'பெலிகோ' ஆகிய வார்த்தைகளை இணைத்து அமைத்துக் கொண்ட தாலிபெலிகோ, தலைப்பாகை அணிந்த தனது தோற்றம் விமர்சனங்களை ஈர்க்கும் என்பதை அறிவார். "நாங்கள் விளம்பரத்திற்காக இதைச் செய்வதாக மக்கள் நினைக்கிறார்கள். ஆனால் அது உண்மை அல்ல," என்கிறார்.

எனினும், சீக்கியத்துடனான தனது தொடர்பு குறித்த தவறான எண்ணங்களை அவர் உடனே மறுக்கிறார். "எனது தந்தையைப் பற்றிப் பேச நான் விரும்புவதில்லை, ஏனெனில் அவர் என் வாழ்க்கையில் எப்போதும் இருந்ததில்லை. எனக்கு இரண்டு வயதாக இருக்கும்போதே அவர் பிரிந்து சென்றுவிட்டார். அவர் மெக்சிகன் நாட்டவரோ அல்லது பஞ்சாபியோ அல்ல." தலைப்பாகை அணிந்தாலும், கருப்பு நிறமே தாலிபெலிகோவின் விருப்பமான நிறமாக உள்ளது. இப்போது பல தலைப்பாகைகள் வைத்திருந்தாலும், அதை கட்டக் கற்றுக்கொள்ள பொறுமை தேவைப்பட்டது. "இப்போது 15 முதல் 20 நிமிடங்களில் கட்டிவிடுவேன். ஆரம்பத்தில் இரண்டு அரை மணி நேரம் ஆகும்!" என்கிறார்.

சீக்கிய சமூகத்தில் பலர் இவரை வரவேற்றாலும், சிலரிடம் கேள்விகள் உள்ளன. "ஒரு மெக்சிகன் கலைஞர் சீக்கியத் தலைப்பாகை அணிவதைப் பார்க்கும்போது முக்கியமான கேள்விகள் எழுகின்றன. இது கலாச்சாரக் திருட்டா (Cultural appropriation) அல்லது கலாச்சாரக் கொண்டாட்டமா (Appreciation)? தலைப்பாகையின் முக்கியத்துவத்தையும், அதனுடன் வரும் பொறுப்புகளையும் அவர் புரிந்து கொண்டுள்ளாரா?" என்கிறார் பைனிவால். இருப்பினும், அமெரிக்காவில் புலம்பெயர்ந்த சமூகத்தினருக்கு எதிரான வெறுப்பு உணர்வு அதிகரித்து வரும் இக்காலக்கட்டத்தில், இந்த இசைக்கூட்டணி மிக முக்கியத்துவம் வாய்ந்தது என்று அவர் நம்புகிறார்.

தனக்குக் கிடைத்த அனுபவங்கள் மிகவும் நேர்மறையானவை என்று தாலிபெலிகோ கூறுகிறார். "பொது இடங்களிலும் கடைகளிலும் மக்கள் என்னைப் பாராட்டினார்கள். பேக்கர்ஸ்ஃபீல்டில் உள்ள ஒரு சீக்கியக் கோவிலுக்குச் சென்றபோது, என்னை அளவற்ற அன்போடு ஏற்றுக்கொண்டார்கள். பஞ்சாபி-மெக்சிகன் குடும்பங்கள் நான் இரு கலாச்சாரங்களையும் கெளரவிப்பதாகக் கூறுகிறார்கள்," என்கிறார்.

தாலிபெலிகோவின் இசைப் பயணம் கேரியோக்கி (Karaoke) மையங்களில் பாடுவதில் தொடங்கியது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அவர் இசையைத் தொழில்முறையாக மாற்ற முடிவு செய்தார். இவரது இசை "துப்பாக்கிகள், காதல் மற்றும் சோகப் பாடல்கள் உள்ளிட்ட வாழ்க்கை முறைகளைப் பற்றியது," என்கிறார்.

இவரது இசைத் தாக்கத்திற்குப் பின்னால் சில துயர நிகழ்வுகளும் உள்ளன. இவருக்குப் பிடித்த ஸ்பானிஷ் பாடகர் 'எனிக்மா நோர்டேனோ' குழுவின் நிறுவனர் எர்னஸ்டோ பராகாஸ் (Ernesto Barrajas); பிடித்த பஞ்சாபி கலைஞர் சித்து மூஸ்வாலா (Sidhu Moosewala). 38 வயதான பராகாஸ் ஆகஸ்ட் 2025-ல் மெக்சிகோவில் சுட்டுக் கொல்லப்பட்டார். 28 வயதான மூஸ்வாலா மே 2022-ல் பஞ்சாபில் படுகொலை செய்யப்பட்டார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, சமூக வலைதளங்களில் 30 வயதான ஹர்வீர் சிங்கைக் கண்டறிந்தார் தாலிபெலிகோ. "அவர் ஸ்பானிஷ் மொழியில் பாடியது என்னைக் கவர்ந்தது. அவரிடம் உண்மையான கலைத்திறனைக் கண்டேன்," என்கிறார்.

பஞ்சாபின் ஜலந்தர் மாவட்டத்தைச் சேர்ந்த ஹர்வீர், 2018-ல் அமெரிக்காவிற்கு வந்து தற்போது லாரி ஓட்டுநராகப் பணிபுரிகிறார். வட அமெரிக்காவின் மிகப்பெரிய பஞ்சாபி மையங்களில் ஒன்றான யுபா சிட்டியில் (Yuba City) வசித்து வரும் அவர், அங்கிருந்த லத்தீனோ மக்களுடன் இணைந்து வாழ்ந்ததால், ஸ்பானிஷ் நாட்டுப்புற இசையான மரியச்சி (Mariachi) மற்றும் கொரிடோ (Corrido) மீது ஈர்ப்பு ஏற்பட்டது.

தாலிபெலிகோவும் ஹர்வீரும் இணைந்து 'வேர்ல்ட் பவர்' (World Power) என்ற பாடலை வெளியிட்டனர். இது அமெரிக்காவிற்குப் புலம்பெயர்ந்தோரின் பங்களிப்பை விவரிக்கும் பாடலாகும். "என் தாயாரும் ஒரு புலம்பெயர்ந்தவர்தான். பின்னணி எதுவாக இருந்தாலும் மக்களின் உரிமைகள் மிதிக்கப்படக் கூடாது. சமூக வலைதளங்கள் சில சமயங்களில் புலம்பெயர்ந்தோரைத் தவறாகச் சித்தரிக்கின்றன," என்கிறார் தாலிபெலிகோ.

2026 ஏப்ரல் 25 அன்று, லோஸ் ஏஞ்சலஸில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில், 'சீக்கிய அமெரிக்க சட்டப் பாதுகாப்பு மற்றும் கல்வி நிதியம்' நடத்திய நிகழ்வில், இவர்கள் இருவரும் இணைந்து பஞ்சாபி மற்றும் ஸ்பானிஷ் கலந்த ராப் இசை நிகழ்ச்சியை நடத்தினர். மற்ற பஞ்சாபி பாடகர்களும் தாலிபெலிகோவை அணுகியுள்ளனர், ஆனால் அவர் அவசரப்பட விரும்பவில்லை. "தற்போது எனது சொந்த இசையில் கவனம் செலுத்தி வருகிறேன்," என்கிறார். பஞ்சாபி மற்றும் மெக்சிகன் இசைக்கருவிகளை இணைத்து முற்றிலும் புதிய இசை வகையை உருவாக்க தாலிபெலிகோவும் ஹர்வீர் சிங்கும் விரும்புகிறார்கள். "முந்தைய கூட்டணிகளில் வரிகள் மட்டுமே கலக்கப்பட்டன, ஆனால் இசை லத்தீன் அல்லது பஞ்சாபியாகவே இருந்தது. நாங்கள் வரிகளை மட்டுமல்ல, இசையையுமே ஒன்றாக இணைக்க முயற்சிக்கிறோம்," என்கிறார் ஹர்வீர்.

இவற்றுக்கு இடையே ஏற்கனவே ஒற்றுமைகள் உள்ளதாக தாலிபெலிகோ நம்புகிறார். "அக்கார்டியன் (Accordion) மற்றும் ஹார்மோனியம் ஆகியவற்றின் ஓசைகள் ஒரே மாதிரி இருக்கும். அவை முற்றிலும் ஒன்றாக இல்லாவிட்டாலும், இசை வடிவங்கள் ஒத்திருக்கின்றன என்கிறார். மோடெஸ்டோ பகுதி இசை விருதுகளின் (Modesto Area Music Awards) செயல்பாட்டு மேலாளர் மிடாக் குட்வின், இந்திய இசையையும் பண்டா (Banda) மற்றும் மரியச்சியையும் இணைப்பதை "ஒரு கச்சிதமான திருமணம்" என்று கூறுகிறார். மோடெஸ்டோ பகுதி இசை அமைப்பின் நிறுவனர் கிறிஸ் மரஃபி கூறும்போது, "தாலிபெலிகோ போன்ற முயற்சிகள் அதிகரிக்கும் போது, இந்த கலாச்சாரங்கள் மக்களிடம் இயல்பாகச் சென்றடையும்... என்னைப் பொறுத்தவரை, இது ஒரு நகரத்தை உண்மையான துடிப்புமிக்கதாக மாற்றுகிறது," என்கிறார்.

(இக்கட்டுரையை எழுதிய ககன்தீப் சிங் அமெரிக்காவில் இயங்கும் ஒரு புலனாய்வுச் செய்தியாளர். கொலம்பியா ஜர்னலிசம் பள்ளியில் அரசியல் மற்றும் உலகளாவிய விவகாரங்களில் முதுகலை பட்டம் பெற்றவர். மிஸ்சூரி ஜர்னலிசம் பள்ளியின் ஆல்பிரட் ஃப்ரெண்ட்லி பிரஸ் பார்ட்னர்ஸ் ஃபெலோஷிப் பெற்ற இவர், புலம்பெயர்தல், கல்வி, குற்றம் மற்றும் நீதி, மற்றும் அமெரிக்காவில் உள்ள தெற்காசிய சமூகத்தினர் குறித்து செய்திகளை வழங்கி வருகிறார்.)

Bootstrap