சிரிய முன்னாள் சர்வாதிகாரி பஷார் அல்-அசாத்திற்கு மரண தண்டனை

சிரிய உள்நாட்டுப் போரின் போது போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களை இழைத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, பதவியிழந்த சிரிய சர்வாதிகாரி பஷார் அல்-அசாத்திற்கு (Bashar al-Assad) அந்நாட்டு நீதிமன்றம் இல்லாத நிலையில் மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.

 டிசம்பர் 2024-இல் ஆட்சி கவிழ்ந்த பிறகு, டமாஸ்கஸிலிருந்து மாஸ்கோவிற்குத் தப்பிச் சென்ற அசாத்திற்கு எதிராக வழங்கப்பட்டுள்ள முதல் தண்டனைத் தீர்ப்பு இதுவாகும். இதன் மூலம் அவரது குடும்பத்தின் 50 ஆண்டுகால ஆட்சி அதிகாரப் பிடி முடிவுக்கு வந்தது.

தெற்கு சிரியாவின் தாரா (Deraa) மாகாணத்தின் முன்னாள் அரசியல் பாதுகாப்புத் தலைவரும், அசாத்தின் உறவினருமான ஆதேஃப் நஜீப் (Atef Najib) நேரில் ஆஜர்படுத்தப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டார். அவர் சிறை உடையில், நீதிமன்றக் கூண்டிற்குள் நிற்கும் படங்கள் வெளியாகியுள்ளன.

2011 மார்ச் மாதத்தில், அரசுக்கு எதிரான சுவரொட்டிகளை எழுதியதாக குற்றம் சாட்டப்பட்ட சில சிறுவர்கள் தாரா பகுதியில் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவமே நாடு தழுவிய போராட்டங்களுக்கும், பின்னர் அது உள்நாட்டுப் போராக வெடிப்பதற்கும் காரணமாக அமைந்தது.

 அசாத்தின் தம்பியும், ராணுவத்தின் '4th Division' படைப்பிரிவின் முன்னாள் தளபதியுமான மகேர் அல்-அசாத் (Maher al-Assad) மற்றும் சில முன்னாள் ராணுவ அதிகாரிகளுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அசாத் மற்றும் அவரது சகோதரர் தற்போது ரஷ்யாவில் தஞ்சம் அடைந்துள்ளதால், புதிய சிரிய அரசாங்கத்தால் அவர்களைக் கைது செய்து கொண்டுவர முடியுமா என்பது கேள்விக் குறியாகவே உள்ளது.

Bootstrap