ஜப்பான் பிரதமர் சானே தகாய்ச்சி (Sanae Takaichi) தமக்கு அன்பளிப்பாக அளித்த உயர்தர மெலன் பழங்கள் (Crown Melons) குறித்து ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பானீசி (Anthony Albanese) தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துகள் அந்நாட்டில் பெரும் எதிர்ப்பை கிளப்பியுள்ளன என செய்திகள் தெரிவிக்கிறது.
கடந்த மே மாதம் ஆஸ்திரேலியாவிற்கு வருகை தந்த ஜப்பான் பிரதமர் சானே தகாய்ச்சி, அந்நாட்டின் மிகவும் மதிப்புமிக்க கிரவுன் மெலன் (Crown Melons) பழங்களை அல்பானீசிக்கு பரிசளித்தார். ஜூலை மாதம் ஒளிபரப்பான 'புஷ் டீப்' (Bush Deep) என்ற பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் பேசிய அல்பானீசி, அந்தப் பழங்கள் "விசித்திரமாக" இருந்ததாகவும், பின்னர் சுவையாக இருந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார். அந்நிகழ்ச்சியின் தொகுப்பாளர், ஜப்பான் பிரதமர் இரு பழங்களைக் கொண்டு வந்ததை பெண் உடலமைப்புடன் ஒப்பிட்டு நகைச்சுவையாகப் பேசியபோது, அல்பானீசியும் அதை ஏற்று நகைச்சுவையாகப் பதிலளித்தார். இக்கருத்துக்கள் தற்போது வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.
ஆஸ்திரேலியாவிற்கான ஜப்பானின் முன்னாள் தூதர் ஷிங்கோ யமகாமி (Shingo Yamagami), பிரதமரின் இக்கருத்து ஒரு "பாலின பாகுபாடு நிறைந்த கேலிப் பேச்சு" (sexist joke) என்றும், இரு நாடுகளுக்கு இடையேயான நட்புறவை இழிவுபடுத்தும் வகையில் உள்ளதாகவும் கடுமையாகச் சாடியுள்ளார்.
ஆஸ்திரேலிய எதிர்க்கட்சிகள், பிரதமர் அல்பானீசி ஜப்பான் பிரதமரிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன.
இந்த விமரிசனங்களை நிராகரித்துள்ள பிரதமர் அல்பானீசி, ஆஸ்திரேலியா-ஜப்பான் இடையேயான உறவு முன்னெப்போதையும் விட வலிமையாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். மேலும், அந்த நகைச்சுவையான கருத்தைத் தொகுப்பாளரே கூறியதாக ஆஸ்திரேலிய அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.