1987-ஆம் ஆண்டு புளோரிடாவில் நடந்த 20 வயது இளம் தாயான மெலிசா "மிஸ்ஸி" டெய்லர் எலிசன் (Melissa "Missy" Taylor Ellison) என்பவரின் கொலை வழக்கு, சுமார் 38 ஆண்டுகளுக்குப் பிறகு கொலையாளியின் ஒப்புதல் வாக்குமூலத்தால் தீர்க்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 28, 1987 அன்று, மெலிசா தனது வீட்டில் படுக்கையறையில் பலத்த காயங்களுடன் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டார். அப்போது அவரது 13 மாத பெண் குழந்தை கேசி (Casie) எதுவும் அறியாமல் பக்கத்து அறையில் அழுதுகொண்டிருந்தது.பல ஆண்டுகளாகக் காவல்துறையினரால் கொலையாளியைக் கண்டுபிடிக்க முடியவில்லை. மெலிசாவின் குடும்பத்தினரும், 'புராஜெக்ட்: கோல்ட் கேஸ்' (Project: Cold Case) அமைப்பும் நீதிக்காகத் தொடர்ந்து போராடி வந்தனர்.
ஜூலை 2026-இல், காரி குளோவாட்ஸ் (Gary Glowacz - 70) என்ற நபர் காவல் நிலையத்தைத் தொடர்புகொண்டு, தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொள்ள விரும்புவதாகத் தெரிவித்தார். கொள்ளையடிப்பதற்காக வீட்டிற்குள் நுழைந்தபோது, மெலிசாவை மரக்கட்டையால் தாக்கியதாகக் கூறிய காரி, அவர் இறந்தது அப்போது தனக்குத் தெரியாது என்றும், சமீபத்தில் அந்த வழக்கை பற்றிய செய்திக் கட்டுரையைப் பார்த்த பிறகே அவர் இறந்தது தெரியவந்து ஒப்புக்கொள்ள வந்ததாகவும் கூறினார்.
குற்றவாளி வழங்கிய ரகசிய விவரங்களை ஆய்வு செய்த காவல்துறையினர், அவர் மீதான குற்றச்சாட்டுகளை உறுதிசெய்து இரண்டாம் நிலை கொலை மற்றும் ஆயுதக் கொள்ளை வழக்குகளின் கீழ் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
38 ஆண்டுகளுக்குப் பிறகு கொலையாளி கைதானாலும், இத்தனை ஆண்டுகளில் தங்களின் தாய் உட்பட பல உறவினர்களை இழந்துவிட்டதால், இது தங்களுக்கு முழுமையான நீதியாக ஆகாது என மெலிசாவின் மகள் கேசி மற்றும் குடும்பத்தினர் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.