ஐரோப்பாவில் வறட்சி அதிகரிப்பு

ஐரோப்பாவில் ஏற்பட்டுள்ள கடும் வெப்ப அலை மற்றும் தீவிர வறட்சி காரணமாக டெனுப் (Danube) நதியின் நீர்மட்டம் வெகுவாகக் குறைந்துள்ளதால், இரண்டாம் உலகப் போரின் போது மூழ்கடிக்கப்பட்ட நாஜி ஜெர்மனியின் போர்க்கப்பல்கள் மீண்டும் வெளியே தெரியத் தொடங்கியுள்ளதாக CBC News செய்தி வெளியிட்டுள்ளது.

செப்டம்பர் 1944-இல் சோவியத் படைகளின் முன்னேற்றத்தைத் தடுப்பதற்காக, செர்பியாவின் பிராஹோவோ (Prahovo) நகருக்கு அருகே நாஜிக்கள் சுமார் 200 போர்க்கப்பல்களை டெனுப் நதியில் மூழ்கடித்தனர். வழக்கமாக கோடைகாலத்தில் ஒன்று அல்லது இரண்டு கப்பல்களின் இடிபாடுகள் மட்டுமே வெளியே தெரியும் நிலையில், இந்த ஆண்டு 12-க்கும் மேற்பட்ட போர்க்கப்பல்களின் சிதைவுகள் வெளியில் தெரிவதாக உள்ளூர் மக்கள் கூறுகின்றனர்.

மே மாதத்திலிருந்து ஐரோப்பாவைத் தாக்கும் 5-வது வெப்ப அலை இதுவாகும். ஜூன் மற்றும் ஜூலை மாதங்கள் மேற்கு ஐரோப்பாவில் பதிவான மிக வெப்பமான மாதங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதனால் சுமார் 25,000 பேர் வெப்பம் சார்ந்த பாதிப்புகளால் உயிரிழந்துள்ளனர்.

நீர்மட்டம் குறைந்ததால் டெனுப் நதியில் ஜெர்மன் ராணுவ மோட்டார் சைக்கிள் (ஹங்கேரியில்), 700 கிலோ எடையுள்ள பிரிட்டிஷ் வெடி குண்டு (ஸ்லோவாக்கியாவில்) மற்றும் மேமத் (Mammoth) விலங்கின் பழங்கால எச்சங்கள் (பல்கேரியாவில்) ஆகியவை கண்டறியப்பட்டுள்ளன. நதியில் நீர்மட்டம் கணிசமாகக் குறைந்ததால், ருமேனியா விவசாயப் பாசனத்திற்கான நீர் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தியுள்ளது. மேலும் ஹங்கேரி மற்றும் ருமேனியாவில் உள்ள அணுமின் நிலையங்களைக் குளிரூட்ட நீர் கிடைக்காமல் மின் உற்பத்தி பாதிக்கும் சூழல் உருவானது.

Bootstrap