இன்று உலக யானைகள் தினம்

இன்று (ஒகஸ்ட் 12) உலக யானைகள் தினம் நினைவுகூரப்படுகிறது. சுற்றாடல் அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், சுற்றாடல் அமைப்பின் தனித்துவமான அடையாளமாகவும், பல்லுயிர்ப் பெருக்கத்தின் மிக முக்கியமான கண்ணியாகவும் திகழும் யானைகளின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு குறித்து உலகளாவிய ரீதியில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளது.

பல ஆண்டுகளாக நாட்டில் முன்னெடுக்கப்பட்ட ஒழுங்கற்ற அபிவிருத்தி நடவடிக்கைகள் காரணமாக யானைகளின் நடமாட்டப் பாதைகளும் வழிகளும் தடைப்பட்டு, கடுமையான சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

தற்போது காட்டு யானைகளுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்கள் குறித்து சுற்றுச்சூழல் நீதி மையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஹேமந்த விதானகே கருத்து தெரிவிக்கையில்:

"இலங்கையில் 5,000 யானைகள் வரை இருப்பதாக முன்னர் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வனவிலங்கு கணக்கெடுப்பின்படி 7,000-க்கும் மேற்பட்ட யானைகள் இருப்பதாகக் கூறப்பட்டது. இந்த எண்ணிக்கையில் எமக்கு சில சந்தேகங்கள் உள்ளன.

நாட்டில் ஆண்டொன்றுக்கு 400-க்கும் மேற்பட்ட யானைகளும், மனித-யானை மோதலினால் சுமார் 200 மனித உயிர்களும் பலியாகின்றன.

நடப்பு ஆண்டில் இதுவரை 180 யானைகளும், 56 மனிதர்களும் உயிரிழந்துள்ளனர். இதில் 75 யானை மரணங்கள் மனிதர்களின் செயல்களால் ஏற்பட்டுள்ளன.

இலங்கையின் நிலப்பரப்பில் 40 சதவீதத்திற்கும் அதிகமான பகுதியை மனிதர்களும் யானைகளும் இணைந்து பகிர்ந்து வாழ்வதே இந்த மரணங்கள் தொடர்ந்து அதிகரிப்பதற்கு முதன்மைச் காரணியாகும்."

மனித-யானை மோதலுக்குத் தீர்வாகத் தமது அமைப்பினால் முன்வைக்கப்பட்டுள்ள முறையான வேலைத்திட்டங்களை அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இதனிடையே, நேற்று (11) மாலை அம்பன்பொல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெலவ பகுதியில் காட்டு யானை தாக்குதலுக்கு இலக்காகி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அம்பன்பொல பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தனது விவசாய நிலத்திற்குள் நுழைந்த காட்டு யானையை விரட்ட முயன்றபோதே அவர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார் என்பது முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Bootstrap