துருக்கியில் நடைபெற்ற நேட்டோ (NATO) உச்சிமாநாட்டிற்குப் பிறகு, சாத்தியமான பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாகத் தாம் இரகசியமாக விமானத்தை மாற்றியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார்.
மாநாட்டின் போது ஈரான் தரப்பிலிருந்து ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்படக்கூடிய அச்சுறுத்தல் இருப்பதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரித்தது. குறிப்பாக, தோளில் வைத்து இயக்கும் ஏவுகணையுடன் ஒருவர் நடமாடியதாகத் தகவல் கிடைத்தது.
டிரம்ப் முதலில் ஊடகக் கேமராக்களின் முன்பாக ஏர் போர்ஸ் ஒன் (Air Force One) போயிங் 747 விமானத்தில் ஏறினார். பின்னர் பாதுகாப்பு அமைப்பினர் அவரை இரகசியமாக ஒரு உணவு விநியோக வாகனத்தின் (catering truck) மூலம் அருகில் இருந்த சிறிய C-32A இராணுவ விமானத்திற்கு மாற்றினர்.
அசல் விமானத்தில் இருந்த செய்தியாளர்களுக்கும் பணியாளர்களுக்கும் அதிபர் மாற்றப்பட்டது தெரியாது. பாதுகாப்பு காரணங்களுக்காக ஜன்னல் திரைகளை மூடி வைக்குமாறு அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. டிரம்புடன் பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் பயணித்தார். அசல் ஏர் போர்ஸ் ஒன் விமானத்தில் வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ மற்றும் கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசென்ட் ஆகியோர் பயணித்தனர்.
ஊடகவியலாளர்களை ஆபத்தான இலக்காக மாறக்கூடிய விமானத்தில் எச்சரிக்கையின்றி விட்டுச்சென்றது குறித்து பத்திரிகையாளர் பாதுகாப்பு அமைப்புகள் கவலை மற்றும் விமர்சனங்களை எழுப்பியுள்ளன.